மஞ்சக்குப்பம் மைதானத்தை மேம்படுத்த திட்ட மதிப்பு ரூ.35 கோடி: அரங்கம், வணிக வளாகம், உணவகம் அமைகிறது

கடலுார்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பின்படி, 35 கோடி ரூபாய் மதிப்பில் மஞ்சக்குப்பம் மைதானம் மற்றும்சுற்றியுள்ள பகுதிகள் மேம்படுத்தப்பட உள்ளது.
கடலுார் மஞ்சக்குப்பம் மைதானத்தில், முதல்வர் ஸ்டாலின் மாவட்டத்தில் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டப் பணிகளை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்து, அரசின் நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு கடந்த 21ம் தேதி வழங்கினார்.
அப்போது அவர், பேசுகையில், கடலுார் மாவட்டத்திற்கு 10 திட்டங்களை அறிவித்தார். அதில் ஒன்று கடலுார், மஞ்சக்குப்பம் மைதானத்தை 35 கோடி ரூபாய் மதிப்பில் மேம்படுத்துவது.
மஞ்சக்குப்பம் மைதானம் ஆங்கிலேயர் ஆட்சி காலம் தொட்டு சிறப்பு வாய்ந்தது. மொத்தம் 35 ஏக்கர் பரப்பளவில் விளையாட்டரங்கம், பூங்கா, மணி மண்டபம் என போக மீதியுள்ள 15 ஏக்கர் திறந்த வெளியாக உள்ளது. இந்த பகுதியைத் தான் மேம்படுத்த முதல்வர் அறிவித்துள்ளார். கடலுார் மாவட்டத்தில் அடையாளமாக விளங்கிய பழைய கலெக்டர் அலுவலக கட்டடத்தின் பாரம்பரியத்தினை பிரதிபலிக்கும் வகையிலும் 2,200 நபர்கள் அமரக்கூடிய அரங்கம், மைதானத்தினை சுற்றி உணவகங்கள், சில்லரை விற்பனைக் கடைகள், பெரிய விளையாட்டுப் பகுதிகள் உள்ளிட்ட வணிக வளாக கடைகள் ஏற்படுத்தப்பட உள்ளன.
மஞ்சக்குப்பம் மைதானத்திற்கு அருகேயுள்ள சுப்பராயலு பூங்கா நவீன வசதியுடன் மேம்படுத்தப்படவுள்ளது. மஞ்சக்குப்பம் மைதானத்திலும், அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் பொதுமக்களுக்கு தேவையான பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய பூங்காவும், பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்துவதற்காக அரங்குகளும், பசுமையான நகர்ப்புற சூழ்நிலைகளும் ஏற்படுத்தப்பட உள்ளது.
மஞ்சக்குப்பம் மைதானத்தினை சுற்றி 3 பெரிய முன் வாயில்கள், குடிநீர் வசதி, மின் வசதி, அடிப்படை வசதிகளுடன் மேம்படுத்தப்படும். இதற்கான பணிகளை மேற்கொள்ள ஆலோசகர் நியமிக்கப்பட்டு கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்படும்.
பணிகள் அனைத்தும் நிறைவுபெறும்போது, கடலுார் மாவட்டத்தில் சிறந்த பொழுதுபோக்கு பூங்காவாக மஞ்சக்குப்பம் மைதானம் திகழும் என கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.
மேலும்
-
புதிய கல்விக் கொள்கை அமல்படுத்தும் தேவை உள்ளது; சொல்கிறார் கவர்னர் ரவி
-
சாம்பியன்ஸ் டிராபியில் மோசமான தோல்வி; பாக்., வீரர்களுக்கு ரத்தாகும் சலுகைகள்?
-
இன்றும் தங்கம் விலை ரூ.400 சரிவு; ஒரு சவரன் ரூ.63,680!
-
நடிகை பாலியல் புகாரில் மாலை 6 மணிக்கு விசாரணைக்கு ஆஜராகிறார் சீமான்
-
கருவில் குழந்தை பாலினத்தை கண்டறிந்த விவகாரம்; அரசு டாக்டர் உட்பட 9 பேர் சஸ்பெண்ட்
-
திருச்சியில் ரூ.1.22 கோடி மதிப்பு தங்கம் பறிமுதல்; கடத்தியது 'குருவி'யா என விசாரணை