தமிழகத்தில் நடப்பது சாத்தானின் ஆட்சி : சீமான்

15

சேலம்: '' தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சி நடக்கவில்லை. சாத்தானின் ஆட்சி நடக்கிறது,'' என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.



சேலம் ஓமலூரில் நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது: அரசியல் என்றால் அழுத்தம் தான். இதில் வேறு ஒன்றும் இல்லை. ஒன்றுமே இல்லாத வழக்கு இது. இந்த விவகாரத்தை நீதிமன்றத்தை நாடியது நான் தான். இந்த வழக்கு முற்று பெற்றுவிட்டால் என்னை ஒன்றும் செய்ய முடியாது. இருக்கிற வரை இழுத்து இழுத்து அசிங்கப்படுத்த முயற்சிக்கின்றனர்.


சட்டத்தின் ஆட்சி நடக்கிறது என அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார். அண்ணா பல்கலை விவகாரத்தில் அமைச்சர் சேகர்பாபுவின் கருத்து என்ன? கள்ளச்சாராயம் குடித்து 62 பேர் கொன்றவர்கள் வழக்கில் கைதானவர் 90 நாளில் வெளியில் வந்து சாராயம் சாய்ச்சினார், இது என்ன ஆட்சி சட்டத்தின் ஆட்சியா? சாத்தானின் ஆட்சியா? பல உயிர்களை பறிகொடுத்துவிட்டு 10 லட்சம் கொடுத்து சரி செய்தீர்கள். ஆனால் குற்றவாளி திருப்பி வந்து அதேதவறை செய்துள்ளார். பயமே இல்லை. இது சட்டத்தின் ஆட்சி இல்லை. சாத்தானின் ஆட்சி.


பள்ளிகளில் தினமும் மாணவிகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகின்றனர்.தினமும் படுகொலை நடக்கிறது. எங்கு சட்டத்தின் ஆட்சியை நடக்கிறது.


நான் இருக்கும் உயரம் உங்களுக்கு பயம் காட்டுகிறது. நான் வளர்ந்துவிடுவேன் என நினைக்கிறீர்கள். அச்சப்படுகிறீர்கள். நடுக்கம் வருவதால் அந்த பெண்ணை கூட்டி வந்து சண்டை போடுகிறீர்கள். வீரன் என்றால் நேருக்கு நேர் சண்டை போட வேண்டும். பெண்ணுக்கு பின்னால் நின்று சண்டை போடக்கூடாது.

வாடகை வாய்களை வைத்து அவதூறு பரப்புகிறீர்கள். அதற்கு சம்பளம் கொடுக்கிறீர்கள். இப்போது அந்த பெண் சென்றாலும் மீண்டும் 2026ல் அழைத்து வருவார்கள். இதனால் தான் இந்த விவகாரத்தை விரைந்து முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என வழக்கை தொடர்ந்தேன். ஆனால், அது சரியாக வரவில்லை. சுப்ரீம் கோர்ட்டை நாடி உள்ளேன். இவ்வாறு சீமான் கூறினார்.


அநாகரிகம்

போலீசார் முன்பு ஆஜராக விமானம் மூலம் சென்னை திரும்பிய சீமான் விமான நிலையத்தில் மீண்டும் நிருபர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது: விசாரணைக்கு வருவதாக சொன்னேன். இரவு 8 மணிக்கு வரும்படி தெரிவித்தனர். சம்மனை ஒட்டும் போது தடுக்கவில்லை. எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு அனுப்பி இருக்கலாம். வீட்டில் நான் இல்லை என்றால், சம்மனை எனது மனைவியிடம் கொடுத்துவிட்டு சென்றிருக்கலாம். எனக்கு சம்மன் கொடுக்காமல் கதவில் ஒட்டிச் சென்றது அநாகரிகம்.

கைதுக்கு பயப்படும் ஆள் நான் இல்லை. என்னை திட்டமிட்டு அவமானப்படுத்த முயற்சி நடக்கிறது. நடிகை விஜயலட்சுமி புகாரில் ஜெயலலிதா, இ.பி.எஸ்., நடவடிக்கை எடுக்கப்படவில்லை. தி.மு.க., ஆட்சிக்கு வரும் போது, மட்டும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. 15 ஆண்டுகளாக ஒரு பெண்ணை வைத்து என்னையும், எனது குடும்பத்தையும் வன்கொடுமை செய்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement