டில்லியில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை வெளியேற்ற வேண்டும்: அமித்ஷா

13

புதுடில்லி: டில்லியில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை கண்டறிந்து அவர்களது சொந்த நாட்டிற்கு அனுப்பி வைக்க வேண்டும், என டில்லி அரசு, போலீசாருக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உத்தரவிட்டு உள்ளார்.



தலைநகர் டில்லியின் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, முதல்வர் ரேகா குப்தா, மாநில அமைச்சர் ஆஷிஸ், டில்லி போலீஸ் கமிஷனர் மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.


இதில் எடுக்கப்பட்ட முடிவுகள் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:


எந்த பாரபட்சமும் இன்றி டில்லியில் செயல்படும் பல மாநில ரவுடிகளை ஒடுக்க வேண்டும். தேசத்தின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ள சட்டவிரோதமாக குடியேறியவர்கள் விவகாரத்தை கடுமையாக கையாள வேண்டும். அவர்களை கண்டுபிடித்து வெளியேற்ற வேண்டும்.


சட்டவிரோதமாக ஊடுருவம் வங்கதேச மற்றும் ரோஹிங்கியா ஊடுருவல்காரர்களுக்கு உதவுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.


2020 ல் டில்லியில் நடந்த கலவரம் தொடர்பான வழக்குகளை விரைவாக விசாரித்து முடிக்க, டில்லி அரசு சிறப்பு வழக்கறிஞரை நியமிக்க வேண்டும். மழை காலங்களில் மழை நீர் தேங்கும் பகுதிகளை கண்டறிந்து அதனை சரி செய்வதற்கான பணிகளில் மாநில அரசு ஈடுபட வேண்டும்.


போலீஸ் துணை கமிஷனர் அந்தஸ்திலான அதிகாரிகள், போலீஸ் ஸ்டேசன் சென்று மக்களின் குறைகளை கேட்டு தீர்க்க வேண்டும். எந்தெந்த பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது என்பதை கண்டறிந்து, டில்லி போலீஸ் கமிஷனர் மற்றும் தலைமை செயலர் சந்தித்து அதற்கு விரைவாக தீர்வு காண வேண்டும். இதன் மூலம் பொது மக்களுக்கு நிவாரணம் கிடைக்கும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

Advertisement