கஜானாவில் இருந்து ஒரு பைசா கூட வீணாகப் போக விடமாட்டேன்: டில்லி முதல்வர் திட்டவட்டம்

2

புதுடில்லி: கஜானாவில் இருந்து ஒரு பைசா கூட வீணாகப் போக விடமாட்டேன் என டில்லி முதல்வர் ரேகா குப்தா உறுதி அளித்தார்.


டில்லி சட்டசபையில் முதல்வர் ரேகா குப்தா பேசியதாவது: தேர்தல் அறிக்கையின் மூலம் அளிக்கப்பட்ட அனைத்து வாக்குறுதிகளையும் தனது அரசாங்கம் நிறைவேற்றும். கஜானாவில் இருந்து ஒரு பைசா கூட வீணாகப் போக விடமாட்டேன். சி. ஏ. ஜி., அறிக்கைகள் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான அரசாங்கத்தை அம்பலப்படுத்தியது மட்டுமல்லாமல், மக்களின் ஆரோக்கியத்துடன் விளையாடியவர்களையும் அம்பலப் படுத்தியுள்ளன.


அவர்கள் டில்லியில் இருந்து வரி வசூலித்து, மற்ற மாநிலங்களில் தேர்தல்களுக்குப் பயன்படுத்தியவர்கள். நாங்கள் அனைத்தும் சி.ஏ.ஜி., அறிக்கைகளாக ஒவ்வொன்றாக வெளியிடுகிறோம், அதனால் அவர்கள் (ஆம் ஆத்மி தலைவர்கள்) பதறிப் போகிறார்கள்.
எந்த அரசாங்கமும் செய்ய முடியாத அளவுக்கு அம்பேத்கருக்கு உரிய மரியாதை கிடைப்பதை நரேந்திர மோடி அரசு உறுதி செய்துள்ளது.


நான் முதல்வராக பதவியேற்ற அடுத்த நாளே அதிஷி என் அலுவலகத்திற்கு வந்து, எப்போது பெண்களுக்கு ரூ.2500 வழங்கப்படும் என்று கேட்டார். இது எனது வேலை, நான் நிச்சயமாக அதை முடிப்பேன் என்று அவரிடம் சொன்னேன். 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தவர்கள் எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement