அரையிறுதியில் ஆஸ்திரேலியா: ஆப்கானிஸ்தான் ஏமாற்றம்

லாகூர்: சாம்பியன்ஸ் டிராபி லீக் போட்டி மழையால் பாதியில் ரத்து செய்யப்பட, ஆஸ்திரேலிய அணி அரையிறுதிக்கு முன்னேறியது. டிராவிஸ் ஹெட் அரைசதம் கடந்து கைகொடுத்தார். ஆப்கானிஸ்தான் அனேகமாக வெளியேறியது.
பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடக்கிறது. லாகூரில் நடந்த 'பி' பிரிவு லீக் போட்டியில் ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற ஆப்கானிஸ்தான் கேப்டன் ஹஷ்மதுல்லா ஷாகிதி, 'பேட்டிங்' தேர்வு செய்தார்.
திணறல் துவக்கம்: ஆப்கானிஸ்தான் அணிக்கு முதல் ஓவரிலேயே அதிர்ச்சி காத்திருந்தது. மணிக்கு 141 கி.மீ., வேகத்தில் ஸ்டார்க் போல ஸ்பென்சர் ஜான்சன் வீசிய 'யார்க்கரில்' குர்பாஸ் (0) போல்டானார். இங்கிலாந்துக்கு எதிராக 177 ரன் விளாசிய இப்ராகிம் ஜத்ரன், இம்முறை 22 ரன்னுக்கு ஜாம்பா 'சுழலில்' சிக்கினார். மேக்ஸ்வெல் வலையில் ரஹ்மத் ஷா (12) அவுட்டாக, 19 ஓவரில் 93/3 ரன் எடுத்து தவித்தது.
அடல் அரைசதம்: பின் கேப்டன் ஹஷ்மதுல்லா ஷாகிதி, சிதிக்குல்லா அடல் சேர்ந்து அணியை மீட்டனர். மேக்ஸ்வெல் பந்தை சிக்சருக்கு அனுப்பிய அடல், 64 பந்தில் அரைசதம் கடந்தார். ஜான்சன் 'வேகத்தில்' அடல் (85, 6 பவுண்டரி, 3 சிக்சர்) அவுட்டானார். ஜாம்பா பந்தில் ஷாகிதி (20) வெளியேறினார். அனுபவ நபி (1) ரன் அவுட்டானார். குல்பதின் (4) நிலைக்கவில்லை. ஆப்கன் 40 ஓவரில் 199/7 ரன் என்ற நிலைக்கு தள்ளப்பட்டது.
ஓமர்சாய் விளாசல்: கடைசி கட்டத்தில் அஸ்மதுல்லா ஓமர்சாய், ரஷித் கான் கைகொடுத்தனர். ரஷித் 19 ரன் எடுத்தார். தொடர்ந்து அசத்திய ஓமர்சாய், எல்லிஸ் பந்தில் ஒரு இமாலய சிக்சர் (103 மீ., துாரம்) அடித்தார். இவர், 54 பந்தில் அரைசதம் எட்டினார். ஓமர்சாய் (67, 4 பவுண்டரி, 5 சிக்சர்), டிவார்ஷியஸ் பந்தில் அவுட்டானார். கடைசி 10 ஓவரில் 74 ரன் எடுக்கப்பட்டன. ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவரில் 273 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.ஆஸ்திரேலியா சார்பில் டிவார்ஷியஸ் அதிபட்சமாக 3 விக்கெட் வீழ்த்தினார்.
ஹெட் அதிரடி: சவாலான இலக்கை விரட்டிய ஆஸ்திரேலிய அணிக்கு டிராவிஸ் ஹெட், மாத்யூ ஷார்ட் கலக்கல் துவக்கம் தந்தனர். ஆப்கானிஸ்தான் பந்துவீச்சு, பீல்டிங் எடுபடாததால், 4 ஓவரில் 42 ரன் எடுக்கப்பட்டன. ஷார்ட், 20 ரன்னில் வெளியேறினார். பின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் 'கம்பெனி' கொடுக்க, தனது அதிரடியை ஹெட் தொடர்ந்தார். ஓமர்சாய் ஓவரில் 'ஹாட்ரிக்' பவுண்டரி அடித்தார். 10 ஓவரில் ஆஸ்திரேலியா 90/1 ரன் எடுத்தது. 34 பந்தில் அரைசதம் எட்டினார் ஹெட். இது ஒருநாள் அரங்கில் இவரது 17வது அரைசதம். ஆஸ்திரேலிய அணி 12.5 ஓவரில் 109/1 ரன் எடுத்திருந்த போது, மழையால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. ஹெட் (59), ஸ்மித் (19) அவுட்டகாமல் இருந்தனர். மழை நின்ற போதும், மைதானத்தில் அதிகளவில் தண்ணீர் தேங்கியிருந்தது. இதையடுத்து போட்டி பாதியில் ரத்து செய்யப்படுவதாக அம்பயர்கள் அறிவித்தனர். இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.
ஓமர்சாய் '1000'
ஒருநாள் அரங்கில் அதிவேகமாக 1000 ரன் எட்டிய ஆப்கானிஸ்தான் வீரர்கள் வரிசையில் மூன்றாவது இடத்தை ரஹ்மத் ஷா உடன் பகிர்ந்து கொண்டனர் அஸ்மதுல்லா ஓமர்சாய். இருவரும் தலா 31 இன்னிங்சில் இம்மைல்கல்லை எட்டினர். முதலிரண்டு இடங்களில் இப்ராகிம் ஜத்ரன் (24), குர்பாஸ் (27) உள்ளனர்.
அதிக உதிரி
நேற்று ஆஸ்திரேலியா துல்லியமாக பந்துவீச தவற, சாம்பியன்ஸ் டிராபியில் அதிக உதிரி (37) கொடுத்த அணிகள் பட்டியலில் 3வது இடத்தை பிடித்தது. முதல் இரு இடங்களில் இந்தியா (42, எதிர், கென்யா, 2004, தி ரோஸ் பவுல்), நெதர்லாந்து (38, எதிர், இலங்கை, 2002, கொழும்பு) உள்ளன.
ஸ்மித் பெருந்தன்மை
எல்லிஸ் பந்தை (46.6) தட்டிவிட்ட ஓமர்சாய் ஒரு ரன் எடுத்தார். மறுமுனையில் இருந்த நுார் அகமது, ஓவர் முடிந்ததாக நினைத்து 'கிரீசை' விட்டு வெளியே நின்றார். அப்போது தான் பீல்டர் எறிந்த பந்து, கீப்பர் இங்லிஸ் கைக்கு வந்தது. உடனே 'பெயில்சை' தகர்த்த இங்லிஸ், ரன் அவுட் கேட்டார். ஆனால், அப்பீலை பெருந்தன்மையுடன் திரும்ப பெற்றார் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்மித்.
கோட்டைவிட்ட ரஷித் கான்
ஆப்கானிஸ்தான் அணியின் 'வில்லன்' ஆனார் ரஷித் கான். பரூக்கி பந்தை (3.1) துாக்கி அடித்தார் டிராவிஸ் ஹெட். இதை நழுவவிட்டார் நட்சத்திர வீரர் ரஷித் கான். அப்போது 6 ரன் தான் எடுத்திருந்தார் ஹெட். வாய்ப்பை பயன்படுத்தி அரைசதம் கடந்தார். இதே போல ஓமர்சாய் பந்தை (4.1) ஷார்ட் அடித்தார். மாற்று வீரர் கரோட்டியை நோக்கி பந்து வந்தும், 'கேட்ச்சை' கோட்டைவிட்டார். அந்த சமயத்தில் 20 ரன் எடுத்திருந்த ஷார்ட், கூடுதலாக ரன் சேர்க்காமல் அவுட்டாக பெரிய பாதிப்பு ஏற்படவில்லை.
யாருக்கு வாய்ப்பு
மழையால் போட்டி ரத்தானதால் ஆஸ்திரேலிய அணி (4 புள்ளி) அரையிறுதிக்கு முன்னேறியது. ஆப்கானிஸ்தான் அணி 3 புள்ளிகளுடன் உள்ளது. இன்று கராச்சியில் நடக்கும் லீக் போட்டியில் தென் ஆப்ரிக்கா, இங்கிலாந்து அணிகள் விளையாடுகின்றன. இதில் தென் ஆப்ரிக்கா (5) வென்றால், 'பி' பிரிவில் முதலிடம் பிடித்து அரையிறுதிக்கு தகுதி பெறும். ஆப்கானிஸ்தான் (3) வெளியேறும்.
* ஒருவேளை இங்கிலாந்து (2) வென்றால், தென் ஆப்ரிக்கா, ஆப்கானிஸ்தான் தலா 3 புள்ளிகளுடன் சமநிலை வகிக்கும். 'ரன்-ரேட்' அடிப்படையில் அரையிறுதிக்கு செல்லும் அணி முடிவாகும். தற்போதுள்ள நிலையில் தென் ஆப்ரிக்காவின் 'ரன்-ரேட்' (2.140), ஆப்கானிஸ்தானை (-0.990) விட வலுவாக உள்ளது. இங்கிலாந்துக்கு எதிராக தென் ஆப்ரிக்க அணி 207 ரன் வித்தியாசத்தில் தோற்றால் மட்டுமே ஆப்கானிஸ்தான் அரையிறுதிக்கு தகுதி பெறலாம்.