வழக்கின் எப்.ஐ.ஆர்.,கள் மாயமான பிரச்னை கண்காணிப்பு அதிகாரி நியமிக்க கோர்ட் உத்தரவு

புதுடில்லி: சிலை கடத்தல் வழக்குகளின், முதல் தகவல் அறிக்கைகள் காணாமல் போனது தொடர்பான விசாரணையை கண்காணிக்க, ஒரு வார காலத்திற்குள் மூத்த ஐ.பி.எஸ்., அதிகாரியை நியமிக்கும்படி, தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பொதுநல மனு



சென்னை உயர் நீதிமன்றத்தில், வழக்கறிஞரான யானை ராஜேந்திரன் தாக்கல் செய்த பொதுநல மனு:

தமிழகத்தில் 300 கோடி ரூபாய் மதிப்பிலான, 41 சிலைகள் கடத்தல் தொடர்பான வழக்கின் ஆவணங்கள் காணாமல் போய் விட்டன. சம்பந்தப்பட்ட போலீஸ் ஸ்டேஷனில் இருந்து இந்த ஆவணங்கள் திருடப்பட்டுள்ளன.

இந்த விவகாரம் தொடர்பாக உரிய விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்.

கோப்புகள் காணாமல் போன விவகாரத்தில், சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டதுடன், சிலை கடத்தல் வழக்குகள் தொடர்பான திருடப்பட்ட கோப்புகளை உடனடியாக மீட்டு, இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என, தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.

இந்த உத்தரவை சரிவர தமிழக அரசு பின்பற்றவில்லை எனக்கூறி, உச்ச நீதிமன்றத்தில் யானை ராஜேந்திரன் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

விசாரணை



இந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை, கடந்த சில வாரங்களுக்கு முன் உச்ச நீதிமன்றத்தில், நீதிபதிகள் அபய் எஸ் ஓஹா தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்த போது, வழக்கு தொடர்பான விபரங்களை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

அதன்படி, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்த தகவல்களில், காணாமல் போன முதல் தகவல் அறிக்கைகளில், 11 முதல் தகவல் அறிக்கைகள் மட்டும் இதுவரை மீட்கப்படவில்லை என்றும், அதற்கு பதிலாக மீண்டும் புதிதாக முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில், இந்த வழக்கு நேற்று மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த விவகாரங்களில் விசாரணை நடைபெற்று வருவதாக தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

அதை பதிவு செய்த நீதிபதிகள், 'இந்த விவகாரத்தில் ஒரு வார காலத்திற்குள் விசாரணை அதிகாரிகள் நியமிக்கப்பட வேண்டும். அந்த விசாரணையை மேற்பார்வை செய்வதற்காக மூத்த ஐ.பி.எஸ்., அதிகாரி நியமிக்கப்பட வேண்டும்.

'இது தொடர்பான பிரமாண பத்திரத்தை மார்ச் இறுதிக்குள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்' என, தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.

Advertisement