புத்தாக்க நிறுவனங்களை ஊக்குவிக்க ரூ.10,000 கோடி ஒதுக்கீடு மத்திய மந்திரி தகவல் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தகவல்

சென்னை: நாட்டில், 'ஸ்டார்ட் அப்' என்ற புத்தாக்க நிறுவனங்களை ஊக்குவிக்க, 10,000 கோடி ரூபாய் மத்திய பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டு உள்ளதாக, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறினார்.
சென்னை ஐ.ஐ.டி.,யில் நேற்று, 'இன்வென்டிவ் 3.0' என்ற நிகழ்ச்சியை, மத்திய கல்வித்துறை இணையமைச்சர் சுகந்தா மஜும்தார் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.
துவக்க விழாவில், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், பதிவு செய்யப்பட்ட காணொளி வாயிலாக வாழ்த்தினார்.
புதுமை இந்தியா
அவர் பேசியதாவது:
நாட்டில் புதுமைகளை படைப்பதில், சென்னை ஐ.ஐ.டி., முன்னிலையில் உள்ளது.
தமிழகம், புதுமைகள், தொழில் முனைவு, விஞ்ஞானத்தின் பூமியாக உள்ளது. பிரதமரின் தொலைநோக்கு திட்டமான, தன்னிறைவு பாரதம் என்ற, 'விக் ஷித் பாரத் 2047'ஐ நோக்கிய பயணத்திற்கானவர்களை இந்த நிகழ்வு இணைக்கும்.
நிகழ்ச்சியில், தமிழகத்தைச் சேர்ந்த ஏழு கல்வி நிறுவனங்கள், தேசிய தர வரிசையில் 50 இடங்களை பிடித்த நிறுவனங்கள், புதிய கண்டுபிடிப்புகளை வழங்கிய நிறுவனங்கள் என, 86 நிறுவனங்களின், 200க்கும் மேற்பட்ட கண்டு பிடிப்புகள் இடம்பெறுவது மகிழ்ச்சி அளிக்கிறது.
உலக அளவில் இந்தாண்டு, இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் பங்களிப்பு, 354 மில்லியன் அமெரிக்க டாலர்களை தாண்டி உள்ளது. இது, உலகில் மூன்றாவது இடமாகும்.
இந்திய உயர் கல்வி நிறுவனங்களின் சக்தியை, ஒரே இடத்தில் அறியும் வாய்ப்பாக இந்நிகழ்ச்சி அமைகிறது.
எதிர்கால புதுமை இந்தியாவின் முகமாக, அடுத்தடுத்த நிகழ்வுகள் மாறும்.
இதில், பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்; உலக முதலீட்டாளர்களுடனான சந்திப்புக்கு வாசலை திறக்கும்.
தொழில்நுட்பம், புதுமை, புத்தாக்கம், தொழில்முனைவை ஊக்குவிக்கவே, மத்திய பட்ஜெட்டில், 10,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
எதிர்காலம்
மத்திய கல்வித்துறை இணை அமைச்சர் சுகந்தா மஜும்தார் பேசியதாவது:
நாட்டின் அறிவியல் ஆராய்ச்சியையும், கல்வியையும் மேம்படுத்த, 1.2 லட்சம் கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்கி உள்ளது. உயர் கல்வி நிறுவனங்களும், தொழில் துறையினரும் பங்கேற்கும் 'இன்வென்டிவ் 3.0' என்ற இந்த நிகழ்வு, புதுமை துறையின் ஒரு பிராண்டாக மாறும்.
இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ள பல தொழில்நுட்பங்களை, தொழில் துறையினர் பயன்படுத்துவர்.
இதன் அடுத்தடுத்த நிகழ்வுகள், எதிர்கால தொழில்நுட்பங்களை பரிமாறும் களமாக அமையும்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில், ஐ.ஐ.டி., இயக்குநர் காமகோடி, டீன் மனு சந்தானம், சாஸ்த்ரா அறிவியல் இதழின் ஆசிரியர் ஹரி பல்லக்காட் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நுால்கள் வெளியீடு
நிகழ்ச்சியில், தொழில் துறையில் முன்னேற்றத்துக்கு வழிவகுத்த இந்திய உயர் கல்வி நிறுவனங்களின் முன்னணி தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் குறித்த காபி டேபிள் புத்தகம், 'பிரபவ் - யோசனைகளில் இருந்து தாக்கம் வரை' என்ற தலைப்பில் வெளியிடப்பட்டது.
சென்னை ஐ.ஐ.டி.,யின் ஓராண்டு சாதனைகள் தொகுக்கப்பட்டு, 'ஸ்வயம் பிளஸ்' தலைப்பிலும், அறிவியல் இதழ், 'சாஸ்திரா' என்ற தலைப்பிலும் வெளியிடப்பட்டன.
கண்காட்சியில், செயற்கை தொழில்நுட்பம், இயந்திர கற்றல், விமான போக்குவரத்து, பாதுகாப்பு, விண்வெளி ஆய்வு, கடல்சார் தொழில்நுட்பம், மருத்துவம், சுகாதார பொறியியல், கிராமப்புற மேம்பாட்டு தொழில்நுட்பம், ஸ்மார்ட் நகரங்கள் அமைப்பு மற்றும் உள்கட்டமைப்பு, தொழில் துறையில் மேம்பட்ட உற்பத்தி, நீடித்த ஆற்றல் மற்றும் மறுசுழற்சி உள்ளிட்ட தலைப்புகளில் கண்டுபிடிப்புகள் இடம் பெற்றன.
