போக்குவரத்து ஊழியர்கள் மார்ச் 6ல் ஊர்வலம்
ராமநாதபுரம்: வரவுக்கும், செலவுக்குமான வித்தியாச தொகையை அரசு வழங்க வலியுறுத்தி, போக்குவரத்து ஊழியர்கள் சென்னையில் கோட்டையை நோக்கி மார்ச், 6ல் ஊர்வலம் நடத்த உள்ளனர்.
அரசு போக்குவரத்து கழகத்தில், சி.ஐ.டி.யு., -- ஏ.ஐ.டியு.சி., பணியாளர் சம்மேளனம் இணைந்த கூட்டமைப்பு சார்பில் கூறியிருப்பதாவது:
போக்குவரத்து ஊழியர்கள் பலன்கள் மறுக்கப்படுவது, ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு ஓய்வு கால பலன்கள் வழங்காதிருப்பது, அகவிலைப்படி மறுப்பு போன்ற பல்வேறு பிரச்னைகளுக்கு அடிப்படையாக இருப்பது தமிழக அரசு போதுமான நிதி வழங்காதது தான்.
வரவுக்கும், செலவுக்குமான வித்தியாசத் தொகையை வழங்க, 10 ஆண்டுகளாக போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. 2022ல் இதற்கான குழுஅமைக்கப்பட்டது.
அதன் பரிந்துரை அடிப்படையில் தேவையான நிதி கேட்டு அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுவரை ஒதுக்கப்படவில்லை. எனவே, தாக்கல் செய்யப்பட உள்ள, 2025 பட்ஜெட்டில் இதற்கு உரிய நிதி ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தி மார்ச் 6ல் சென்னை பல்லவன் இல்லத்தில் இருந்து கோட்டையை நோக்கி ஊர்வலம் செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு தெரிவிக்கப் பட்டுள்ளது.