கேள்விக்குறி

ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் தற்போது ஐந்து தளங்கள் கொண்ட புதிய கட்டடம், மற்றும் பழைய கட்டடங்கள், மகப்பேறு மற்றும் குழந்தைகள் நலப்பிரிவுக்கு ஐந்து தளங்கள் கொண்ட கட்டடம் என தனித்தனியாக ஒவ்வொரு பிரிவும் அமைந்துள்ளன.

இது தவிர வெளி நோயாளிகள் சிகிச்சைக்கான பழைய கட்டடங்கள், பயிற்சி மருத்துவர்களுக்கான குடியிருப்பு, மருத்துவர்கள், செவிலியர்களுக்கான குடியிருப்புகள் என கட்டடங்கள் அதிகளவில் உள்ளன. இந்நிலையில் இவை அனைத்துக்கும் பாதுகாப்பு பணியில் 6 பேர் மட்டுமே உள்ளனர்.

இவர்கள் ஆறு பேருக்கும் வயர்லஸ் கருவி வழங்கப்பட்டுள்ளது. தினமும் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு ஆயிரத்திற்கும் அதிகமானோர் வந்து செல்கின்றனர். யார் வருகிறார்கள், போகிறார்கள் என்பது யாருக்கும் தெரிவதில்லை.

சில தினங்களுக்கு முன்பு மகப்பேறு பிரிவில் அனுமதிக்கப்பட்ட பெண் ஒருவர் அறுவை சிகிச்சைக்கு பயந்து மருத்துவமனை வார்டில் இருந்து வெளியே வந்துள்ளார். வெளியே அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. மகப்பேறு பிரிவு வாசலில் திறந்த வெளியில் வேறு வழியின்றி துணிகளைக் கொண்டு மறைத்து டாக்டர்கள் பிரசவம் பார்த்துள்ளனர். அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

வார்டுகளில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நோயாளிகள் எங்கு போகிறார்கள், வருகிறார்கள் என்பதை யாரும் கவனிப்பதில்லை. கடந்த ஆண்டு ஒருவர் மாடியில் ஏறி அங்கிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். சில மாதங்களுக்கு முன்பு மாடியில் மற்றொரு நோயாளி இறந்து கிடந்தார்.

இது போல் தொடர்ந்து நடக்கிறது. அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை முழுவதும் 55 க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் இருந்தும் கட்டுப்பாட்டு அறையில் முறையான கண்காணிப்பு பணிகளை மேற்கொள்வதில்லை.

இங்கு வரும் நோயாளிகள், உதவியாளர்களின் இரு சக்கர வாகனங்கள், அலைபேசிகள், பொருட்கள் திருட்டு போகின்றன. இரு சக்கர வாகனங்களில் உள்ள ஆவணங்களை திருடி செல்கின்றனர்.

இதனால் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் தொடர்ந்து பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது. நிர்வாகம் மருத்துவமனை வளாகத்தில் முழுமையான பாதுகாப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.

Advertisement