கனவு இல்லத்தை அழகுபடுத்த இவ்வளவு விஷயம் கவனிக்கணுமா?

நம் கனவு இல்லத்தை அழகாக்க, வெள்ளை சுண்ணாம்பு, காய்ந்த டிஸ்டெம்பர், சிமென்ட் வண்ணம், வார்னீஷ் பூச்சு போன்று இன்னும் ஏராளமான நுட்பமுறை கொண்ட வண்ணங்கள் உள்ளன. இவற்றை எப்படி பயன்படுத்த வேண்டும்; எவற்றை பயன்படுத்தக்கூடாது என விளக்குகிறார், 'கொசினா' உறுப்பினர் மாரிமுத்துராஜ்.

அவர் கூறியதாவது:

வண்ணப்பூச்சுக்கு தயார் நிலையில் உள்ள சுவரில் எந்தவித ஓட்டை, உடைசலும் இருக்கக்கூடாது. வண்ண பூச்சுக்கு பெரும்பாலும் ஏணிகள், தொங்கவிடப்பட்ட தொட்டில் மேடைகள் பயன்படுத்த வேண்டும். சுவற்றில் உள்ள துாசு, எண்ணெய் முதலானவற்றை சுத்தம் செய்த பின்னரே பணியை தொடங்க வேண்டும்.

முதலில் புதிய சுவருக்கோ, கூரைக்கோ வெள்ளை அடிக்க வேண்டும். வெள்ளை அடிக்கும்போது கதவு, ஜன்னல், தரை போன்றவற்றுக்கு, தக்க பாதுகாப்பு செய்ய வேண்டும்.

பெரும்பாலும், புதிய சுவருக்கோ, கூரைக்கோ முதல் கோட்டாக வெள்ளை அடிப்பதோ, சுண்ணாம்பு பவுடர் கட்டியாக கலக்கி பட்டி பார்ப்பதோ, வழக்கமாக உள்ளது.

எந்த வகை வண்ணம் தீட்ட உள்ளோமோ, அதற்கு தகுந்த முதல் கோட் பூசியாகிவிட்ட நிலையில், அடுத்து வண்ணப்பூச்சு கொடுக்கும் முன், முதல் கோட் அடித்த சுவரை, உப்புதாளால் தேய்த்து, துடைக்க வேண்டும்.

ஒவ்வொரு கோட் பூசும்போதும், போதிய இடைவெளி விட்டு, முறையாக செய்ய வேண்டும். குறைந்தது, 24 மணி நேர இடைவெளி தேவைப்படும்.

அதற்கு குறைவாக, மறுகோட்டிங் அடிக்கக்கூடாது. ஒரே நிறுவனம் தயாரித்த வண்ணங்களை வாங்கி, பிரஷ் கொண்டு முதலில் பக்கவாட்டிலும், பிறகு நெடுக்காகவும் பூச வேண்டும்.

டிஸ்டெம்பர் முடிந்த வரையில், வெயில் படாத இடத்திலே பயன்படுத்த வேண்டும். தேவையான அளவு நீர் தெளித்திட வேண்டும். சுண்ணாம்பு பூச்சோ, டிஸ்டெம்பரோ ஏற்கனவே அடித்த சுவரில் கண்டிப்பாக, சிமென்ட் பெயின்ட் அடிக்கக்கூடாது.

பெயின்ட் அடித்த நான்கு வாரங்களுக்கு பிறகுதான், சுவர்களை கழுவ வேண்டும். ரோலர், பிரஷ், ஸ்ப்ரேயிங் இயந்திரங்கள் மூலமாக, பூச்சுவேலை முடித்த பிறகு, பிரஷ்களை டர்பென்டைனால் அலசி, லின்சீடு எண்ணெயால் சுத்தம் செய்ய வேண்டும்.

இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement