தொழில் அதிபர் வீட்டில் ஈ.டி., சோதனை

சென்னை: சட்டவிரோத பணபரிமாற்றம் தொடர்பாக, சென்னையில் தொழில் அதிபர் வீட்டில், அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

கடந்த ஓராண்டாக, சென்னை மேற்கு மாம்பலம் சுப்பா தெரு, சிவன்குடில் என்ற வீட்டில், வெங்கட்ராகவன் என்பவர் வசித்து வருகிறார். இவர் மருத்துவ உபகரணங்கள் வாங்கி, அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு விற்று வருகிறார்.

இவர் சட்ட விரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக, அமலாக்கத்துறை அதிகாரிகள், நான்கு பேர் அவரது வீட்டில் நேற்று சோதனை நடத்தினர்.

அதில், முக்கிய ஆவணங்கள் சிக்கி இருப்பதாக கூறப்படுகிறது. வெங்கட்ராகவன் உறவினர் ஒருவர், வருவாய் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார்.

இவர் திருச்சியில் வசித்து வருகிறார். அவருக்கும் சட்ட விரோத பண பரிமாற்றத்தில் தொடர்பு இருப்பதாக தெரியவந்துள்ளதால், அதுகுறித்தும் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

Advertisement