பிரதான குடிநீர் குழாய் மாற்றும் பணி தீவிரம்

திருப்பூர்; பெத்திச்செட்டிபுரத்தில் சேதமான நிலையில் இருந்த பிரதான குடிநீர் குழாய்கள் மாற்றும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

திருப்பூர், ராயபுரம் பகுதியைக் கடந்து பெத்திச்செட்டிபுரம் வழியாக பிரதான குடிநீர் குழாய் அமைந்துள்ளது.நகரின் வடக்கு பகுதியிலிருந்து இந்தக்குழாய்கள், நொய்யல் ஆற்றைக் கடந்து தெற்கு பகுதிக்குச் செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த இரும்பு குழாய்கள் அமைக்கப்பட்டு பல ஆண்டுகளாகிறது.குழாய்கள் பல இடங்களில் சேதமடைந்து பெரிய அளவிலான துளைகள் ஏற்பட்டுள்ளன. ஆண்டுக்கணக்கில் இந்த துளைகள் வாயிலாக குடிநீர் வெளியேறி வீணாகி வந்தது. பதித்து பல ஆண்டுகளான நிலையில், பல இடங்களிலும் பெரிய அளவிலான துளைகள் ஏற்பட்டதால், குடிநீர் வீணாவது நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது.குழாய்கள் கடந்து செல்லும் இடத்தில் கழிவு நீரும் பாய்ந்து சென்றதால், மக்கள் அதிருப்தியடைந்தனர்.

இந்த குழாய்கள் அப்பகுதியில் முழுமையாக மாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டது. அவ்வகையில் புதிய இரும்பு குழாய்கள் கொண்டு வந்து இணைக்கும் வகையில், பணிகள் துவங்கியுள்ளன. பழுதான குழாய்களுக்கு பதிலாக இவை பொருத்தப்படும். இதன் மூலம் குடிநீர் வீணாகி வரும் நீண்ட கால பிரச்னைக்கு தீர்வு ஏற்படும்.

Advertisement