போக்சோவில் ஆசிரியர் கைது விடுவிக்க மாணவர்கள் மறியல்

வாணியம்பாடி: வாணியம்பாடி அருகே, அரசு பள்ளி மாணவியர் ஆறு பேரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக போக்சோவில் கைது செய்யப்பட்ட ஆசிரியருக்கு ஆதரவாக, பள்ளி மாணவ - மாணவியர், 100க்கும் மேற்பட்டோர் மறியலில் ஈடுபட்டனர்.

திருப்பத்துார் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த காவலுார் மலை ரெட்டியூர் அரசு மேல்நிலைப்பள்ளியில், 400க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் படிக்கின்றனர். ஊத்தங்கரையை சேர்ந்த பிரபு, 33, இங்கு ஆங்கில ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.

கடந்த, 21ல் ஏழாம் வகுப்பு மாணவியருக்கான கம்ப்யூட்டர் தேர்வின்போது, பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக, ஆறு மாணவியர் கூறிய புகாரில், வாணியம்பாடி அனைத்து மகளிர் போலீசார், பிரபுவை கடந்த, 25ல், போக்சோவில் கைது செய்தனர்.

நேற்று காலை மாணவ - மாணவியர் நுாற்றுக்கும் மேற்பட்டோர், 'ஆசிரியர் எவ்வித தவறும் செய்யவில்லை; அவரை விடுவிக்க வேண்டும்' என, வலியுறுத்தி, ஆலங்காயம் - ஜமுனாமரத்துார் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். வாணியம்பாடி டி.எஸ்.பி., விஜயகுமார் பேச்சு நடத்தினார். மாணவ, மாணவியர் ஏற்கவில்லை.

திருப்பத்துார் மாவட்ட கல்வி அலுவலர் புண்ணியகோடி, வாணியம்பாடி தாசில்தார் உமாரம்யா ஆகியோர் பேச்சு நடத்தி, ஆசிரியரை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதையடுத்து, போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Advertisement