அரசு ஊழியர் பணிநீக்கம் செல்லாது டிரம்ப் உத்தரவுக்கு நீதிமன்றம் தடை

சான்பிரான்சிஸ்கோ: அரசு ஊழியர்களை பணிநீக்கம் செய்து, அமெரிக்க அதிபர் டிரம்ப் பிறப்பித்த உத்தரவுக்கு சான் பிரான்சிஸ்கோ நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்றதும், அரசின் செலவுகளை குறைப்பது தொடர்பான பரிந்துரைகளை அளிக்க, தொழிலதிபர் எலான் மஸ்க் தலைமையில் ஒரு துறையை உருவாக்கினார்.

இதையடுத்து, செலவுகளை குறைப்பதற்காக பல அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதன்படி, வெளிநாடுகளுக்கு அமெரிக்கா வழங்கி வரும் கோடிக்கணக்கான ரூபாய் நிதி உதவி நிறுத்தப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக சூழலியல், கடல் ஆராய்ச்சி உள்ளிட்ட பல்வேறு அரசு துறை ஊழியர்கள், ஆயிரக்கணக்கானோர் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.

குறிப்பாக பணியில் சேர்ந்து இரண்டு ஆண்டுகளுக்கு உட்பட்ட அனைவரையுமே டிஸ்மிஸ் செய்யும் உத்தரவை, அமெரிக்க பணியாளர் மேலாண்மை அலுவலகம் பிறப்பித்தது.

இதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த கலிபோர்னியா மாகாணத்தின் சான்பிரான்சிஸ்கோ மாவட்ட நீதிமன்றம், அரசு ஊழியர்களின் 'டிஸ்மிஸ்' உத்தரவை அதிரடியாக ரத்து செய்துள்ளது.

நீதிபதி வில்லிம் அஸ்லப் பிறப்பித்த தீர்ப்பில் கூறியதாவது:

பணியில் புதிதாக சேர்ந்து, தகுதிகாண் காலத்தில் இருக்கும் ஊழியர்கள்தான் அரசின் உயிர் நாடி. அமெரிக்க வரலாற்றில் எந்தவொரு சட்டத்தின் கீழும், அரசு ஊழியர்களை பணிநீக்கம் செய்யவோ, வேறு துறைக்கு மாற்றி பணி நியமனம் செய்யவோ, பணியாளர் மேலாண்மை அலுவலகத்துக்கு எந்த அதிகாரமும் கிடையாது.

எனவே, பல்வேறு அரசு துறை நிறுவனங்களுக்கு அனுப்பப்பட்ட, பல ஆயிரக்கணக்கான ஊழியர்களின் பணிநீக்க உத்தரவுகளை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement