மஹாபோதி கோவிலில் தொடரும் போராட்டம் புத்த துறவியர் காலவரையற்ற உண்ணாவிரதம் நிர்வாகத்தை தங்களிடம் ஒப்படைக்க வலியுறுத்தல்

பாட்னா: பீஹாரின் கயாவில் உள்ள மஹாபோதி கோவில் நிர்வாக கட்டுப்பாட்டை முழுமையாக தங்கள் வசம் தரக்கோரி, நுாற்றுக்கணக்கான புத்தமத துறவியர், நடத்தி வரும் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் நேற்று, 16வது நாளை எட்டியது.
அரசகுல வாரிசான கவுதம சித்தார்த்தர், புத்தராக மாற காரணமான போதி மரம், பீஹாரின் கயாவில் உள்ளது. இந்த போதி மரத்தின் கீழ், அவர் ஞானம் பெற்றதாக நம்பப்படுகிறது. அசோக சக்கரவர்த்தியின் ஆட்சி காலம் நடந்த 3ம் நுாற்றாண்டில், போதி மரம் இருந்த இடத்தில், மஹாபோதி கோவில் கட்டப்பட்டது.
புத்த மதத்தினரின் மிக முக்கிய புனிதத்தலமாக கருதப்படும் இந்த கோவிலின் கலாசார மற்றும் வரலாற்று முக்கியத்துவத்தை கருத்தில் வைத்து, உலக பாரம்பரிய தலமாக, யுனெஸ்கோ 2002ல் அறிவித்தது.
இந்நிலையில், மஹாபோதி கோவில், புத்தகயா கோவில் சட்டத்தின் கீழ், ஒன்பது உறுப்பினர்கள் அடங்கிய புத்தகயா கோவில் நிர்வாக கமிட்டியால் நிர்வகிக்கப்படுகிறது. இந்த கமிட்டி, கயா மாவட்ட கலெக்டர் தலைமையின் கீழ், ஐந்து ஹிந்துக்கள் மற்றும் நான்கு புத்த மத உறுப்பினர்களை கொண்டுள்ளது.
இந்த ஒன்பது உறுப்பினர்கள் தான் கோவில் நிர்வாகத்தை கவனித்து வருகின்றனர். இந்நிலையில், நிர்வாகத்தை முழுமையாக புத்த மதத்தினர் வசம் ஒப்படைக்கும்படி துறவியர் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
மேலும், புத்த மத விவகாரங்களில் மாநில அரசு தலையீடு இருக்கக் கூடாது என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இவற்றை வலியுறுத்தி, நுாற்றுக்கணக்கான புத்தமத துறவியர், காலவரையற்ற உண்ணாவிரதத்தை துவக்கினர். அவர்களின் போராட்டம் நேற்றுடன் 16வது நாளை எட்டியது.
இந்த போராட்டத்துக்கு, உள்நாடு மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த புத்த மத அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன. திரிபுரா, லடாக், மஹாராஷ்டிரா, உ.பி., உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த ஆதரவாளர்கள் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
மேலும்
-
முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள்: பிரதமர் மோடி வாழ்த்து
-
தெலுங்கானா சுரங்க விபத்து; தொழிலாளர்கள் 8 பேரும் உயிரிழப்பு
-
போப் உடல்நிலையில் முன்னேற்றம்; வாடிகன் தகவல்
-
கோர்ட் நடவடிக்கைகள் மொபைல்போனில் பதிவு; விதி மீறியவருக்கு ரூ.1 லட்சம் அபராதம்
-
'யார் பெரிய தாதா' என சிறைக்குள் மோதல் போட்டியில் ரவுடியை தீர்த்தது அம்பலம்
-
உரிமம் பெறாத கைத்துப்பாக்கி வைத்திருந்த போலீஸ்காரரிடம் 3 நாள் விசாரணை