தடை இருந்தும் தாராளம்; வனப்பகுதிக்குள் பிளாஸ்டிக் பயன்பாடு 'ஜோர்'; மது காலி பாட்டில்கள் கண்ட இடங்களில் வீச்சு

மாவட்டத்தில் வனப்பகுதிகள் அதிகம் உள்ளன. இதிலும் சிறுமலை, கொடைக்கானல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் சுற்றுலா தலங்களாக உள்ளது. இங்கு தினமும் ஏராளமான பயணிகள் வெளி மாநிலம், மாவட்டங்களிலிருந்து சுற்றுலா வருகின்றனர்.


இங்கு வரும் பயணிகள் தண்ணீர் பாட்டில்கள், பாலிதீன் கவர்கள் உள்ளிட்ட பல்வேறு விதமான பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு வருகின்றனர். கார்கள், டூவீலர்கள், பஸ்களில் செல்லும் போது பிளாஸ்டிக் பொருட்களை கண்ட இடத்தில் வீசி செல்கின்றனர்.


இதை அங்கிருக்கும் காட்டுமாடுகள், முயல் போன்ற வனவிலங்குகள் சாப்பிட்டு பாதிக்கும் நிலை தொடர்கிறது.


பிளாஸ்டிக் கழிவுகள் மண்ணுக்கு அடியில் சென்றாலும் அது மக்காத பொருட்களாக பல ஆண்டுகளுக்கு அப்படியே இருந்து நிலத்தை பாழாக்குகிறது.


இதோடு சாப்பாடு வாங்கி செல்லும் பார்சல்களையும் சாப்பிட்டு விட்டு அங்கேயே வீசுகின்றனர். தொடரும் இப்பிரச்னையால் இயற்கை வளங்கள் பாதிக்கிறது.


முக்கியமாக சுற்றுலா தலங்களுக்கு செல்லும் சிலர் மது பாட்டில்களை குடிக்க வாங்கி சென்று காலி பாட்டில்களை வனத்தில் வீசுகின்றனர். இந்த பாட்டில்கள் உடைந்து அதன் கண்ணாடி துண்டுகள் மரங்களிலிருந்து விழும் இலைச்சருகுகளுக்குள் விழுந்து கிடக்கின்றன.


கோடை காலம் வந்ததும் இந்த கண்ணாடி துண்டுகள் மூலம் வெப்பம் கடத்தப்பட்டு காட்டு தீ ஏற்படுகிறது. இதன்மூலம் வன நிலங்கள் மட்டுமில்லாமல் அருகிலிருக்கும் குடியிருப்புகள், வன விலங்குகள் பாதிக்கப்படும் நிலையும் ஏற்படுகிறது. பொது மக்கள் வன சுற்றுலா தலங்களுக்கு செல்லும் போது பிளாஸ்டிக், மது பாட்டில்களை கொண்டு செல்வதை தவிர்க்க வேண்டும். அதிகாரிகளும் இதன்மீது கவனம் செலுத்த வேண்டும்.

Advertisement