சீமானுக்கு அடுத்த நெருக்கடி; சம்மனுடன் சென்ற ஈரோடு போலீசார்

11


சென்னை: இடைத்தேர்தலின் போது சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு சம்மன் வழங்க 2வது நாளாக ஈரோடு போலீசார் நீலாங்கரைக்கு சென்றுள்ளனர்.


நடிகை அளித்த பாலியல் புகார் குறித்த விசாரணைக்கு வளசரவாக்கம் போலீஸ் ஸ்டேஷனில் ஆஜராக வேண்டும் என்று நீலாங்கரையில் உள்ள சீமானின் வீட்டுக்கு போலீசார் சென்றுள்ளனர். அங்கு அவரது வீட்டின் முன்பு சம்மனை போலீசார் ஒட்டிச் சென்றனர்.


இந்த சம்மனை சீமான் வீட்டு ஊழியர்கள் கிழித்த நிலையில், இரு தரப்பினருக்கும் மோதல் ஏற்பட்டது. வாக்குவாதம் தொடர்ந்த நிலையில், சீமான் வீட்டு ஊழியர்கள் இருவரை போலீசார் கைது செய்தனர். அவர்களில் ஒருவரிடம் இருந்து துப்பாக்கியும் பறிமுதல் செய்யப்பட்டது.


இதையடுத்து, வீட்டு முன்பு போலீசார் சம்மன் ஒட்ட வசதியாக தனி போர்டை சீமான் தரப்பினர் வைத்துள்ளனர். தொடர்ந்து, வளசரவாக்கம் போலீஸ் ஸ்டேஷனில் நேற்றிரவு சீமான் ஆஜராகினார்.


இந்த நிலையில், சீமானுக்கு மற்றொரு சம்மனை கொடுப்பதற்காக, ஈரோடு போலீசார் நீலாங்கரையில் உள்ள சீமான் வீடு முன்பு 2வது நாளாக சென்றுள்ளனர். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்தின் போது, வெடிகுண்டு வீசுவேன் என்று வன்முறையை தூண்டும் வகையில் சீமான் பேசியதாக புகார் எழுந்துள்ளது.


வன்முறையை தூண்டும் வகையில் பேசிய வழக்கில் சீமானுக்கு சம்மன் வழங்க நீலாங்கரைக்கு 2வது நாளாக கருங்கல்பாளையம் போலீசார் முகாமிட்டுள்ளனர்.

Advertisement