'யார் பெரிய தாதா' என சிறைக்குள் மோதல் போட்டியில் ரவுடியை தீர்த்தது அம்பலம்

சென்னை : 'சிறையில் இருக்கும்போதே, யார் பெரிய தாதா என்ற மோதல் ஏற்பட்டதால் தீர்த்துக் கட்டினோம்' என, அண்ணா நகர் ராபர்ட் கொலையில் கைதானவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளார்.

கிழக்கு அண்ணா நகர், அன்னை சத்யா நகரைச் சேர்ந்த ரவுடி ராபர்ட், 28 என்பவரை, இரு தினங்களுக்கு முன், மர்ம கும்பல் வெட்டிக் கொலை செய்தது. அதற்குமுன், அதே கும்பல் அயனாவரத்தில், சிறுவன் கிடைக்காததால், அவரது தாய் ரேவதி, 32 என்பவரை, தலையில் வெட்டிவிட்டு தப்பியது.

விசாரணையில், 2019ல் ராபர்ட் கூட்டாளி கோகுலை, முன்விரோதத்தில், லோகு கும்பல் கொலை செய்தது.

இதுதொடர்பாக, அயனாவரத்தைச் சேர்ந்த லோகு, 34, மோகன்லான் 23, சிலம்பரசன், 23, தீபக், 21, சங்கர் பாய், 28, ஐ.சி.எப்., வெங்கடேசன், 29 ஆகியோரை கைது செய்து, அண்ணா நகர் போலீசார் சிறையில் அடைத்தனர்.

இதில், லோகு, சங்கர் பாய் தப்ப முயன்றதால், கை, காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அவர், அண்ணா நகர் போலீசில் அளித்த வாக்குமூலம்:

கோகுலை தீர்த்துக் கட்டியதில் இருந்து, அவரது கூட்டாளியான ராபர்ட், என்னை கொலை செய்ய முயற்சித்தார். சில மாதங்களுக்கு முன், இருவரும் வெவ்வேறு வழக்கில் புழல் சிறையில் இருந்தோம்.

சிறையிலேயே, 'ஏரியாவில் யார் பெரிய தாதா' என்ற மோதல் ஏற்பட்டு, என்னை கொலை செய்வதாக, நேரடியாக சவால் விட்டார். யார், யாரை முதலில் கொலை செய்வது என்ற போட்டா போட்டி இருந்தது. கடந்த ஜனவரி 31ல் ஜாமினில் வெளிவந்ததில் இருந்ததே, ராபர்ட்டை தீர்த்துக்கட்ட திட்டமிட்டேன். ராபர்ட் தம்பி ஜோசப் கூட்டாளியான, அயனாவரத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவன், என் கூட்டாளிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்தார். இருவரையும் ஒரே நேரத்தில் தீர்த்துக்கட்ட திட்டமிட்டோம். அதில், சிறுவன் தப்பி விட்டார்.

இவ்வாறு அவர் போலீசிடம் கூறியிருந்தார்.

Advertisement