அழகில் மயங்க அழைக்கும் தனி உலகு... மனதை கொத்தும் அலகு!

''வெளிநாட்டு இன, வித்தியாசமான செல்லங்களை கொஞ்சிவிட்டு அவைகளுடன் நேரம் செலவிட விரும்புவோர், கேரளாவில் உள்ள, 'பார்ம் வில்லா' வரலாம்,'' என்கிறார், இதன் உரிமையாளர் பிஹாஸ்.

இதன் சிறப்பம்சங்கள் குறித்து, இவர் நம்மிடம் பகிர்ந்தவை:



கேரளா, சாவக்காடில், கிட்டத்தட்ட 2 ஏக்கர் பரப்பளவில், பார்ம் வில்லா (Farm Villa) அமைத்துள்ளோம். இது முழுக்க முழுக்க, செல்லப்பிராணிகளை பற்றிய தகவல்களை, அடுத்த தலைமுறைக்கு கடத்துவதற்காக, நண்பர்கள் ஹிஷாம், பர்சீன் ஆகியோரின் கூட்டு உழைப்பால் உருவானது.

எங்களுக்கு, வித்தியாசமான செல்லப்பிராணிகள், அதன் உணவுப்பழக்கம், வாழும் முறையை அறிந்து கொள்வதில் ஆர்வம் அதிகம். இதற்காக, நிறைய இடங்களுக்கு பயணித்திருக்கிறோம். அடுத்த தலைமுறைக்கு, விலங்குகள் உடனான பிணைப்பை ஏற்படுத்த முடிவு செய்து, களமிறங்கினோம். இங்கு தற்போது, பள்ளி மாணவர்கள் குழுவாக வந்து, நேரம் செலவிடுவதை பார்க்கும் போது, மனதுக்கு நிறைவாக இருக்கிறது.

எங்கள் பார்க்கில், 200க்கும் மேற்பட்ட, 50 வகையான பறவைகள் இருக்கின்றன. ஒவ்வொரு பறவையின் பெயர், அதன் பிறப்பிடம், சிறப்பம்சம் குறித்த பலகை வைக்கப்பட்டுள்ளது. பறவைகள் சரணாலயத்திற்குள் நுழைந்து விட்டால், எளிதில் வெளியே வர மாட்டீர்கள்.

சிறிய வகை குரங்கு, நெருப்புக்கோழி, வாத்து, அன்னப்பறவை, ஒட்டகம், சைனீஷ் கிங் ஆடு, முயல், இக்வானா, பாம்பு வகைகள், கீரி, எட்டுக்கால் பூச்சி என, ஊர்வன, நடப்பன, பறப்பனவற்றில், எல்லா வகையான எக்ஸாடிக் விலங்குகளும் இருக்கின்றன. இவை அனைத்தும், சுதந்திரமாக சுற்றித்திரிய போதுமான வசதிகள், உள்ளன. இதை பாரமரிக்க, போதிய ஆட்கள் இருக்கின்றனர்.

இங்கே, உங்களுக்கு பிடித்த விலங்கு, பறவைகளுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம். உணவளித்து மகிழலாம். கூடுதலாக தகவல்களை கேட்டு தெரிந்து கொள்ளலாம். காலை 10:30 மணி முதல், மாலை 6:30 மணி வரை, வில்லா திறந்திருக்கும். மொபைலுக்குள் தொலைந்து விட்ட குழந்தைகளை, இதுபோன்ற இடங்களுக்கு அழைத்து வந்து, விலங்குகள் மீது அன்பு செலுத்த வேண்டியதன் அவசியத்தை உணர்த்துங்கள்.

இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

Advertisement