அட, இத்தனை நாளா இது தெரியாம போச்சே! 'அனிமல் அசிஸ்டெட் தெரபி'

இந்தியாவில் செல்லப்பிராணி வளர்ப்பதற்கான தேவையை உணர்த்தியது, கொரோனா தொற்று பரவிய காலகட்டத்தில் தான். தனிமை, வெறுமை, மன அழுத்தம், பகிர்தலின்மை, மகிழ்ச்சியான சூழலை தேடுதல், நோய் தாக்கத்தில் இருந்து விடுபடுதல் என, பல காரணங்களுக்காக, ஏதாவது ஒரு செல்லப்பிராணியை வளர்க்க பலரும் ஆசைப்பட்டனர். இக்கட்டான சூழலில், துணையாக இருந்ததோடு மகிழ்ச்சியான சூழலை உருவாக்கி தந்து, பெருந்தொற்று காலக்கட்டத்தை கடப்பதற்கான மன உறுதியை செல்லப்பிராணிகள் ஏற்படுத்தித்தந்தன. இந்த அனுபவம் பலருக்கும் நிகழ்ந்திருக்கும்.

ஆனால் மேற்கத்திய நாடுகளில், 18ம் நுாற்றாண்டிலேயே மனிதர்களுக்கான மருத்துவ சிகிச்சையில், விலங்குகளின் பங்களிப்பான 'அனிமல் அசிஸ்டெட் தெரபி' (Animal Assisted Therapy), முறை இருந்துள்ளது. அதாவது, நோயாளிக்கான குறிப்பிட்ட சிகிச்சையில், செல்லப்பிராணிகளை உடனிருக்க செய்யும் போது அவற்றுடன் நேரம் செலவிடும் போது, ரத்த அழுத்தம் இயல்பாவதோடு, மனஅழுத்தம், சோர்வு, கவலை, பயம், பதற்றம் குறைவதை கண்டறிந்துள்ளனர்.

1961ல், அமெரிக்காவை சேர்ந்த டாக்டர் போரிஸ் எம்.லெவின்சன் தன் நாயை, வாய் பேச முடியாத நிலையில் உள்ள குழந்தையுடன் பழக அனுமதித்துள்ளார். குறிப்பிட்ட கால இடைவெளியில், அக்குழந்தை, நாயுடன் பேச ஆரம்பித்துள்ளது. இத்தரவுகள் உண்மை என்பதை, பல மருத்துவ ஆய்வு கட்டுரைகளும் குறிப்பிட்டுள்ளன. செல்லப்பிராணிகளுடன், தினசரி 15 நிமிடம் செலவிட்டால், நம் மனநிலையை பாதிக்கக்கூடிய, ஆறு நரம்பியல் கடத்திகள் சமநிலை அடைகின்றன.

'அனிமல் அசிஸ்டெட் தெரபி'யால் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்து, ஐரோப்பிய ஒருங்கிணைந்த மருத்துவ இதழில், கடந்த 2016-2023ல் நடத்திய சர்வே முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இதில், இத்தெரபியால், மன அழுத்தம் தொடர்புடைய ஹார்மோன்களான, 'எபினெப்ரின், நார்எபினெப்ரீன்'ஆகியவற்றின் சுரப்பு குறைந்து, மகிழ்ச்சியை தரும் ஹார்மோன்களான, டோபமைன், ஆக்ஸிடோசின் சுரப்பை அதிகரிப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால், மேற்கத்திய நாடுகளில், பல பல்கலைக்கழகங்களில், 'அனிமல் அசிஸ்டெட் தெரபி'யை, பட்ட, பட்டய படிப்பாக வழங்குகின்றன.

இந்தியாவில் எப்படி



இந்தியாவில், கடந்த 2005ல், மும்பையில், 'அனிமல் ஏஞ்சல்ஸ் பவுண்டேஷன்' என்ற தன்னார்வ நிறுவனம், முதல் முறையாக அனிமல் அசிஸ்டெட் தெரபி மையத்தை துவக்கியது. மும்பையை சேர்ந்த, மனவ் பவுண்டேஷனில், சிம்பா என்ற பூனையை வைத்து சிகிச்சை வழங்கப்படுகிறது. பெங்களூரு, டில்லி போன்ற பெருநகரங்களில், சொற்ப எண்ணிக்கையில், இம்மையங்கள் செயல்படுகின்றன. சென்னை, மதுரையில், ஒரு சில சிறப்பு பள்ளிகளில், ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை, செல்லப்பிராணிகளுடன் நேரம் செலவிட வைக்கின்றனர்.

வழக்கமான மருத்துவ சிகிச்சையில், செல்லப்பிராணிகளை பயன்படுத்தும் போது, நோயாளியிடம் வெளிப்படும், நேர்மறை எண்ணங்களால், அவர்கள் விரைவில் குணமடைய முடிவதாக, மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், மன நோயாளிகள், புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மட்டுமல்ல, முதியோர் இல்லங்களில் தனிமையில் வாடுவோர், சிறை கைதிகளுக்கும், இச்சிகிச்சை முறையால், உடலளவிலும், மனதளவிலும் மிகப்பெரிய மாற்றங்கள் உருவாகின்றன.

நகரமயமாக்கலால், கூட்டுக்குடும்பங்கள் உடைந்துவிட்ட இக்காலக்கட்டத்தில், குழந்தைகளுக்கான மகிழ்ச்சியான சூழலை அமைத்துத்தரவும், பணிப்பளுவால் ஏற்படும் மன அழுத்தத்தை மறையச் செய்யவும், செல்லப்பிராணி வளர்ப்பது அவசியமாகிறது.

- ச.மெரில்ராஜ், அரசு உதவி கால்நடை மருத்துவர், மதுரை.

Advertisement