புதுச்சேரியில் சுகாதார திருவிழா: கவர்னர், முதல்வர் துவக்கி வைப்பு

புதுச்சேரி: புதுச்சேரி சுகாதாரத்துறை சார்பில், மூன்று நாட்கள் நடக்கும் சுகாதார திருவிழாவை கவர்னர் கைலாஷ்நாதன், முதல்வர் ரங்கசாமி ஆகியோர் துவக்கி வைத்தனர்.

புதுச்சேரி அரசு சுகாதாரத்துறை சார்பில், உலக சுகாதார தினத்தை முன்னிட்டு 'மாபெரும் சுகாதார திருவிழா', கருவடிக்குப்பம் காமராஜர் மணி மண்டபத்தில் நேற்று மாலை துவங்கியது. திருவிழாவை கவர்னர் கைலாஷ்நாதன், முதல்வர் ரங்கசாமி ஆகியோர், குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தனர். டெங்கு காய்ச்சலை குறைத்திட, பள்ளிகளில் 'டிரீம்ஸ்-24' என்ற கல்வி விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்பு திட்டத்தினை செயல்படுத்திய, அரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் தன்னார்வலர்கள், மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

விழாவில், சபாநாயகர் செல்வம், அமைச்சர் சாய் சரவணன்குமார், தலைமை செயலர் சரத்சவுகான், அரசு செயலர் ஜெயந்தகுமார் ரே, சுகாதாரத்துறை இயக்குநர் ரவிச்சந்திரன், துணை இயக்குநர் ஆனந்தலட்சுமி உட்பட பலர் பங்கேற்றனர்.

தொடர்ந்து, நேற்று முதல் மூன்று நாட்களுக்கு, தினசரி மாலை 3:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை, சிறப்பு முகாம் நடக்கிறது. இதில், பொது சுகாதார சேவைகள், வாய், மார்பக, கர்ப்பவாய் புற்றுநோய் பரிசோதனைகள் மற்றும் ஆலோசனைகள், சர்க்கரை, ரத்த அழுத்தம், ரத்த பரிசோதனைகள், கண், காது, மூக்கு, தொண்டை, மனநலம் மற்றும் குழந்தைகளுக்கான மருத்துவ ஆலோசனைகள், இருதயம், நுரையீரல், நரம்பியல், சிறுநீரக நோய்க்கான பரிசோதனைகள் மற்றும் ஆலோசனைகள், அந்தந்த துறை சார்ந்த சிறப்பு வல்லுனர்களால் இலவசமாக வழங்கப்படுகிறது.

மேலும், சுகாதார கண்காட்சி, ஆயுஷ் மற்றும் யோகா உடற்பயிற்சி முறைகள், ஆரோக்கிய உணவு திருவிழா போன்றவை இடம் பெற்றுள்ளன. சித்தா, ஹோமியோபதி, ஆயுர்வேதா போன்ற இந்திய மருத்துவ முறை மருத்துவர்கள் பங்கு பெற்று ஆலோசனை மற்றும் மருந்துகள் வழங்குகின்றனர். மருத்துவ குணம் கொண்ட செடிகள், அதன் முக்கியத்துவம் குறித்தும் காட்சி படுத்தப்பட்டுள்ளது.

Advertisement