அறிந்துகொள்வோமா!

''வீட்டில் ஒரு கிரே பேரட் வளர்த்தால் கொஞ்சும் மொழியில், கெஞ்சி பேசும் அதன் தேன்குரலின் ரீங்காரத்தை கேட்டுக்கொண்டே இருக்கலாம்,'' என்கிறார், 'ஏ.ஆர்., பேர்ட்ஸ் பார்ம்' (AR Birds Farm) உரிமையாளர் ராம்குமார்.

கிரே பேரட் பற்றி, 'செல்லமே' பக்கத்திற்காக, நம்மிடம் பகிர்ந்தவை:

ஆப்பிரிக்கா நாட்டை சேர்ந்த, கிரே பேரட், 40-60 ஆண்டுகள் வாழும். எளிதில் நம்மிடம் நெருங்கிவிடும். எட்டு மாதத்தில் பேச துவங்கிவிடும். பிறந்து ஓரிரு மாதங்களுக்கு பின் கையில் எடுத்து, உணவு கொடுக்க பழக்கப்படுத்தினால் உறவாடும்.

விரிக்கும் சிறகின் நீளம் மட்டும், 46-52 செ.மீ., வரை இருக்கும். பெரிய வகை பறவை என்பதால் கூண்டில் வைத்து, பழக்குவதே சிறந்தது. விளையாட ஓய்வெடுக்க வசதியாக கூண்டின் அளவு இருப்பது அவசியம். சிறிய இடத்திற்குள் பறவைகளால், மகிழ்ச்சியாக வாழ முடியாது.

 இதனோடு விளையாடுவது, சிறகை தடவி கொடுப்பது, நகம் வெட்டுவது என நேரம் செலவிட வேண்டும். புரோட்டீன் அதிகமுள்ள உணவுகளை கொடுக்கலாம். முந்திரி, பாதாம், வால்நட், உலர் திராட்சை, பழங்கள், சோளம், முளைக்கட்டிய பயறு வகைகள் கொடுத்தால் ஆரோக்கியமாக வளரும்.

 வீட்டில் சமைத்த உணவு ஆகாது; ஆயுள் குறைந்துவிடும்.

 அது சாப்பிடும் உணவு, தண்ணீரின் அளவு, உடலில் நடக்கும் மாற்றங்களை கண்காணித்தால் மட்டுமே நோய் தொற்று ஏற்பட்டாலும் உடனே குணப்படுத்த முடியும்.

 தனிமையில் வாடுவோர், மனம் விட்டு பேச துணை இல்லாமல் தவிப்போர், செல்லப்பிராணி வளர்க்க ஆசைப்பட்டால், கிரே பேரட் தேர்வு செய்யலாம். இது, சின்ன சின்ன சத்தத்தையும் உள்வாங்கி மீண்டும் அதே போன்று ஒலித்து காட்டும். உங்களுடன் கொஞ்சும் மொழியில் பேசிக்கொண்டே இருக்கும். பெயர் சொல்லி உரிமையுடன் அழைத்து சண்டையிடும். இதன் தேன்குரலின் ரீங்காரத்தை கேட்டு கொண்டே இருக்கலாம்.

பசுமையை தேடும் பறவைகளை, வீட்டில் வளர்த்தால், நந்தவனத்தின் வாசம், அறை முழுக்க வியாபிப்பதை உணரலாம்.

Advertisement