நீர் நிலைகளில் ஆக்கிரமிப்பு அகற்றுவதில் மெத்தனம்! அதிகாரிகள் மீது விவசாயிகள் பகிரங்க புகார்

கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஏரிகள் உள்ளிட்ட நீர் நிலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் அதிகாரிகள் மெத்தனமாக செயல்படுவதாக குறைகேட்பு கூட்டத்தில் விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.
கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் வேளாண் மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கினார். கூட்டத்தில் விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் தங்களது கோரிக்கை மற்றும் புகார்களை தெரிவித்தனர்.
மாவட்டத்தில் மஞ்சள் அதிகளவில் சாகுபடி செய்யப்படும் நிலையில், மஞ்சள் வாரசந்தை நடத்த வேண்டும். கொம்பு மஞ்சள் ஏற்றுமதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். கரும்பு வெட்டு கூலியை கட்டுபடுத்த வேண்டும். தரணி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் நிலுவைத் தொகையை பெற்றுத் தர வேண்டும். உரம் வாங்கும் விவசாயிகளுக்கு கடைகளில் பில் வழங்குவது கிடையாது. வேளாண் அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும்.
மரவள்ளி கிழங்கு அதிக விலைக்கு கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுப்பணித்துறை மற்றும் ஊராட்சிகளின் கட்டுபாட்டில் உள்ள ஏரிகள், நீர் வரத்து கால்வாய், நீர் பாசன வாய்க்கால்கள் பெரும்பாலான இடங்களில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளன. இதனை அகற்றுவதற்கு பலமுறை புகார் தெரிவித்தும் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்காமல் மெத்தனமாக செயல்படுகின்றனர். ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வேளாண் விற்பனை கிடங்கு மற்றும் விதை சுத்தகரிப்பு நிலையத்தை ஆய்வு மேற்கொள்ள வேண்டும். கள்ளக்குறிச்சி நகரில் சாலை ஆக்கிரமிப்பு மற்றும் சாலையோர பள்ளத்தால் அவ்வப்போது விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. தற்போது உயிரிழிப்பு அபாயத்தால் இரு சக்கர வாகனங்களில் செல்வோர் அச்சமடைந்துள்ளனர். எனவே, நகரில் உள்ள சாலையை அகலப்படுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பஸ் வசதியின்றி உள்ள அரசு கல்லுாரிக்கு மினி பஸ் வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். பெஞ்சல் புயல் பாதிப்பு பயிர்களுக்கு காப்பீடு தொகை வழங்க வேண்டும்.
மார்க்கெட் கமிட்டிகளில் சிண்டிகேட் அமைத்து விவசாய விளை பொருட்களுக்கு குறைவான விலை நிர்ணயம் செய்வதை தடுக்க வேண்டும்.
கிராமப்புறங்களில் உள்ள அரசு பள்ளிகளில் மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும்.
இவ்வாறு விவசாயிகள் பேசினார்.
கூட்டத்தில் டி.ஆர்.ஓ., ஜீவா, வேளாண் இணை இயக்குனர் சத்தியமூர்த்தி, துணை இயக்குனர் அன்பழகன், தோட்டக்கலை துணை இயக்குனர் சிவக்குமார், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் முருகேசன் மற்றும் துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
மேலும்
-
முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள்: பிரதமர் மோடி வாழ்த்து
-
தெலுங்கானா சுரங்க விபத்து; தொழிலாளர்கள் 8 பேரும் உயிரிழப்பு
-
போப் உடல்நிலையில் தொடர்ந்து முன்னேற்றம்; வாடிகன் தகவல்
-
கோர்ட் நடவடிக்கைகள் மொபைல்போனில் பதிவு; விதி மீறியவருக்கு ரூ.1 லட்சம் அபராதம்
-
'யார் பெரிய தாதா' என சிறைக்குள் மோதல் போட்டியில் ரவுடியை தீர்த்தது அம்பலம்
-
உரிமம் பெறாத கைத்துப்பாக்கி வைத்திருந்த போலீஸ்காரரிடம் 3 நாள் விசாரணை