அத்திக்கடவு - அவிநாசி திட்ட நீர் கிடைக்காமல் குளம், குட்டைகள்

திருப்பூர்; ''திருப்பூர் ஒன்றியத்தின் சில ஊராட்சிகளில், கருவிகள் பொருத்தப்பட்டும், குளம், குட்டைகளுக்கு அவிநாசி அத்திக்கடவு திட்டத்தில் தண்ணீர் கிடைக்கவில்லை'' என, விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

அத்திக்கடவு - அவிநாசி நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டத்தில், கோவை, திருப்பூர் மாவட்டங்களை சேர்ந்த கிராமங்களுக்கு தண்ணீர் கிடைத்துள்ளது. குளம், குட்டைகளில், சோலார் கருவிகள் பொருத்தி குழாய் மூலம் தண்ணீர் விடப்படுகிறது. திருப்பூர் ஒன்றியத்தின் வடக்கே உள்ள, 10 ஊராட்சிகளில், பொங்குபாளையம் ஊராட்சி நீங்கலாக, அனைத்து ஊராட்சிகளும் இத்திட்டத்தில் தேர்வாகின. கடந்த சில மாதங்களாக, குளம், குட்டைகளுக்கு தண்ணீர் வந்துள்ளது.

இருப்பினும், சொக்கனுார் ஊராட்சியில், கல்லாங்காடு குட்டை, தெக்காலத்தோட்டம் குட்டை, ஆலாங்காடு குட்டை, பெரிய குட்டை, சிறிய தடுப்பணை, காட்டுப்பாளையம் எருக்கல்மேடு உட்பட, பட்டம்பாளையம், ஈட்டிவீரம்பாளையம் ஊராட்சிகளில் உள்ள குளம், குட்டைகளுக்கு இதுவரை தண்ணீர் வரவில்லை. கணக்கம்பாளையம், காளிபாளையம், பெருமாநல்லுார், ஈட்டிவீரம்பாளையம், வள்ளிபுரம், தொரவலுார், மேற்குபதி, சொக்கனுார், பட்டம்பாளையம் ஊராட்சிகளிலும், சோலார் மற்றும் ஓ.எம்.எஸ்., கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன; இருப்பினும், பல குட்டைகளுக்கு, இதுவரை தண்ணீர் கிடைக்கவில்லை.

கவனம் செலுத்த வேண்டும்

குளம், குட்டைகளில், அனைத்து கருவிகளும் பொருத்திய பிறகும், இதுவரை அவிநாசி -அத்திக்கடவு திட்டத்தில் தண்ணீர் கிடைக்கவில்லை. விடுபட்ட குளம், குட்டைகளுக்கு தண்ணீர் வழங்க வேண்டும்; பொங்குபாளையம் ஊராட்சி குளம், குட்டைக்கும் தண்ணீர் வழங்க, மாவட்ட நிர்வாகம் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.- அப்புசாமி, செயலாளர் திருப்பூர் வடக்கு ஒன்றியம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்.

Advertisement