விண்ணில் நுண்ணுயிர் ஆய்விற்காக செயற்கைக்கோள்

நெற்குப்பை : திருப்புத்துார் ஒன்றியம் செவ்வூர் ஏ.வி.எம்.பள்ளியில் தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு மாணவர்கள் விண்ணில் நுண்ணுயிர் ஆய்விற்காக செயற்கைக்கோள் ஏவினர்.

இப்பள்ளி மாணவர்கள் ஓபன் ஸ்பேஸ் பவுண்டேசனுடன் இணைந்து விண்ணில் உள்ள நுண்ணுயிர் குறித்து ஆய்வு செய்கின்றனர். விண்ணில் ஆய்வு செய்ய 22 மாணவர்கள் கொண்ட குழுவினர் 2 கிலோ எடையிலான செயற்கைகோளை உருவாக்கினர்.

தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு நேற்று காலை அமைச்சர் பெரியகருப்பன் தலைமையில் ஹீலியம் வாயு நிரப்பப்பட்ட பலுானை இயக்கி விண்ணில் ஏவப்பட்டது. 30 கி.மீ. உயரத்திற்கு சென்று வளிமண்டலத்தில் நிலை கொண்டு மானிட்டர் உள்ளிட்ட கருவிகள் மூலம் ஆய்வு செய்தது. தொடர்ந்து உடன் எடுத்துச் சென்ற 'ஈஸ்ட்' நுண்ணுயிரியின் செயல்பாடும் கண்காணிக்கப்பட்டது. பின்னர் மேலுாரில் பாராசூட் மூலம் செயற்கை கோள் தரை இறங்கியது. அதிலுள்ள பதிவுகள் மாணவர்களால் ஆய்வு செய்யப்பட்டு 15 நாட்களில் இஸ்ரோவிற்கு அனுப்பப்பட உள்ளது. அதன் பின்னர் ஆய்வு முடிவுகள் அறிக்கையாக வெளியிட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

மாணவர்களுக்கு உதவிய ஆராய்ச்சியாளர் பாலாஜி பிரசாத் சுந்தரவடிவேலு, நிர்வாகி செல்வின் அன்பரசு, முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி மணி, ஆசிரியர் கார்த்திக் பங்கேற்றனர்.

Advertisement