தை மாதம் மழை இல்லாததால் மா மகசூல் அதிகரிக்கும் என n 5 ஆண்டுகளுக்கு பின் நல்ல விளைச்சலுக்கு வாய்ப்பு

பெரியகுளம்: மாவட்டத்தில் தை மாதம் மழை பெய்யாததால் மா மரங்களில் இலையே தெரியாத அளவிற்கு பூக்கள் பூத்து, பாசியாக மாறியுள்ளது. ஐந்து ஆண்டுகளுக்கு பின் இந்த ஆண்டு நல்ல மகசூல் கிடைக்கும் என்ற அறிகுறி ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.



தமிழகத்தில் சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களுக்கு அடுத்தபடியாக தேனி மாவட்டத்தில் பெரியகுளம், போடி, கம்பம் பகுதியில் 10 ஆயிரம் ஏக்கரில் மா சாகுபடியாகிறது. மாவட்டத்தில் உள்ள நீர், மண் வளத்தால் இங்கு விளையும் மாங்காய் தனி சுவை இருக்கும்.


பெரியகுளம் பகுதியில் 5 ஆண்டுகளாக மா சாகுபடியில் பூ பூக்கும் தருணத்தில் மழையும், பிஞ்சான நேரத்தில் அதிக காற்று என முரண்பாடான இயற்கை சூழலால், செல் பூச்சி தாக்கத்தால் மா விளைச்சல் பாதித்தது.


இதனால் விவசாயிகள் சோர்வடைந்தனர். தற்போது காலத்து மாங்காய் எனும் முதல் போகத்தில் டிசம்பரில் மரங்களில் பூ பூக்க துவங்கியது. ஜன.,யில் 80 சதவீதம் மரங்களில் பூ பூத்துள்ளது. இது 5 ஆண்டுகளுக்கு பிறகு நல்ல மகசூலுக்கான அறிகுறியாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.


கடந்த காலங்களில் டிச., ஜன., பூ பூத்த தருணத்தில், தை மாதம் பெய்த மழையால் பூக்கள் உதிர்ந்தும். பருவநிலை மாற்றம் காரணமாக பூச்சிகள் அதிகரித்தது விளைச்சல் பாதித்தது. தற்போது மரங்களில் பூத்து குலுங்கும் நிலையில், தை மாதம் மழை குறைவு, அவ்வப்போது சாரல் பெய்ததால் பூக்கள் உதிராமல் அடுத்த கட்ட வளர்ச்சியில் உள்ளது. இதே சூழல் மார்ச் 15 வரை நீடித்தால் பூக்கள் பிஞ்சுகளாக வளர்ச்சியடைந்து விளைச்சல் அதிகரிக்கும் நிலை உருவாகியுள்ளது.

மகிழ்ச்சி



கார்மேகம், விவசாயி, பெரியகுளம்: மாம்பூக்களை பார்த்து மகிழ்ந்து விடாதே என்ற பழமொழி உண்டு. இதற்கு மாறாக தை மாதம் மழை குறைவால் பூக்கள் உதிராமல் தப்பித்தது.

இதனால் விவசாயிகள் மரங்களுக்கு ஒன்று, இரண்டு, மூன்று என நான்காவது மருந்து அடித்து வருகின்றனர். தற்போதைய நிலையில் மாம்பூக்கள் பிஞ்சாகி, அடுத்த மாதம் காயாக அறுவடைக்கு தயாராகும். 80 சதவீதம் மாந்தோப்பில் பூக்கள் பிஞ்சாக திரண்டு வருவதால் அடுத்த மாதம் முதல் மாந்தோப்பை குத்தகைக்கு எடுப்பவர்கள் அதிகம் வருவார்கள். பெரியகுளம் பகுதியில் மரத்திற்கு தலா 200 முதல் 250 கிலோவும், எக்டேருக்கு 15 டன் வரை மகசூல் கிடைக்கும். புதிய ரகம் அறிமுகம் செய்ய வேண்டும்.

Advertisement