கடலுார் மாவட்டத்தில் காய்கறிகள் விலை வீழ்ச்சி! அறுவடை செய்யப்படும் பொருட்கள் குவிகிறது

கடலுார் மாவட்டத்தில் தக்காளியை தொடர்ந்து உற்பத்தி செய்யப்படும் பல காய்கறிகள் மார்க்கெட்டில் குவிந்து வருவதால் விலை சரிந்து வருகிறது. இதனால் நடுத்தர மற்றும் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


தமிழகத்தில் சமையலுக்கு பன்படுத்துவதில் தக்காளி முக்கிய பங்கு வகிக்கிறது. பெரும்பான்மையான சமையல்கள் அனைத்திலும் தக்காளி இன்றியமையாத பொருளாக உள்ளது.

தக்காளி எப்போதுமே கிலோ 10, 12 என விற்பனை செய்யப்பட்டு வந்தது, திடீரென உயர்ந்து 35 ரூபாய் வரை விற்பனையானது. அண்மைக் காலமாக கிலோ 12 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்கள் மழை காலமாக இருந்ததால் காய்கறிகள் பயிர் செய்ய முடியாமல் போனது.

இதனால் மழைக்குறைவான மாவட்டத்தில் இருந்து வரவழைப்பதால் வாகன வாடகையால் காய்கறிகள் விலை கிடுகிடுவென உயர்ந்தது. தற்போது மழை முடிந்து விவசாயிகள் அனைத்து காய்கறி பயிர்களையும் சாகுபடி செய்துள்ளனர். அவ்வாறு சாகுபடி செய்யப்பட்ட காய்கறிகள் அறுவடை செய்யப்பட்டு வருகின்றன.

அதன் காரணமாக காய்கறிகள் மார்க்கெட்டில் குவிந்து வருவதால் விலை படிப்படியாக குறைந்து வருகிறது.

கிலோ 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட கத்தரிக்காய் 25 ரூபாயாகவும், 100 ரூபாயாக விற்பனை செய்யப்பட்ட பீன்ஸ் 50 ரூபாயாகவும், 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட வெங்காயம் 30 ரூபாய்க்கும், அவரைக்காய் 28 ரூபாய்க்கும், இஞ்சி கிலோ 100 ரூபாய்க்கும், பச்சை மிளகாய் 25 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் சவ்சவ் கிலோ 14 ரூபாய்க்கும், பீட்ருட் 20 ரூபாய்க்கும், உருளைக்கிழங்கு 26 ரூபாய்க்கும், வெண்டைக்காய் 30 ரூபாய்க்கும், முள்ளங்கி 18 ரூபாய்க்கும், கருணைக்கிழங்கு 78 ரூபாய்க்கும், சுரைக்காய் 12 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பாக பூண்டு விலை கிலோக 400 ரூபாய் வரை விலை போனது. அதுவும் முதல்தரமான பூண்டு அல்ல.

தற்போது பெரிய அளவிலான பூண்டு கிலோ 100 ரூபாய்க்கு குறைந்து விற்பனை செய்யப்படுகிறது. மூன்றில் ஒரு பகுதியாக விலை குறைந்ததால் அனைத்து தரப்பு மக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இன்னும் சிலர் கிராமங்களில் வாகனங்களில் விற்பனை செய்வோர், விலை உயர்த்தி விற்பனை செய்து லாபம் பார்க்கின்றனர். இது ஒருபுறமிருக்க, காய்கறி விலை வீழ்ச்சி அடைந்துள்ளதைப்போல மளிகைப்பொருளும் வீழ்ச்சி அடைந்தால் மகிழ்ச்சியாக இருக்கும் என இல்லத்தரசிகள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

Advertisement