நன்றியே இல்லை... அமெரிக்காவுக்கு அவமரியாதை: குற்றம் சாட்டி உக்ரைன் அதிபரை வெளியேற்றினார் டிரம்ப்

16

வாஷிங்டன்: போரை முடிவுக்கு கொண்டு வர, அமெரிக்க அதிபர் டிரம்ப், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நடத்திய பேச்சு தோல்வியில் முடிந்தது.

உக்ரைன்-ரஷ்யா இடையே 3 ஆண்டுக்கு மேல் போர் நடந்து வருகிறது. இந்தப் போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டிரம்ப் நடவடிக்கை எடுத்து, ரஷ்ய அதிபர் புடினுடன் தொலை பேசியில் உரையாடினார். இந்நிலையில், வெள்ளை மாளிகையில் போரை முடிவுக்கு கொண்டு வர, அமெரிக்க அதிபர் டிரம்ப், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நடத்திய பேச்சு தோல்வியில் முடிந்தது.




அப்போது, உக்ரைன் அதிபரிடம் டிரம்ப் கூறியதாவது: நீங்கள் லட்சக்கணக்கான உயிர்களோடு விளையாடுகிறீர்கள்? நீங்கள் இந்த நாட்டை அவமதிக்கிறீர்கள்; 350 பில்லியன் டாலர்களை அமெரிக்கா உங்களுக்காக செலவு செய்தது. உங்கள் வீரர்கள் அமெரிக்க போர் கருவிகளை வைத்தே சண்டையிட்டனர். அது மட்டும் இல்லை என்றால் போர் 1 வாரத்தில் முடிந்திருக்கும்.


ரஷ்யா உடன் போரில் உக்ரைன் வெல்லப்போவதில்லை. உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியால் 3ம் உலக போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு டிரம்ப் கடுமையாக சாடினார். பின்னர் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, அமெரிக்க அதிபர் டிரம்ப் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.


பின்னர், 'நன்றி இல்லாமல் நடந்து கொள்வதாக உக்ரைன் அதிபர் மீது குற்றம் சாட்டிய டிரம்ப், உக்ரைன் குழுவினரை வெள்ளை மாளிகையிலிருந்து வெளியேற உத்தரவிட்டார். இதனால் பொருளாதார ஒப்பந்தத்தில் கையெழுத்திடாமலும், வெள்ளை மாளிகையில் நடந்த விருந்தில் பங்கேற்காமலும் ஜெலன்ஸ்கி கிளம்பி சென்றார்.



வெள்ளை மாளிகையில் நடந்த வாக்குவாதத்துக்கு பிறகு செய்தி நிறுவனத்திடம் பேசிய உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி,
'அமெரிக்க அதிபரிடம் மன்னிப்பு கேட்க வேண்டிய தேவையில்லை என்று நான் கருதுகிறேன்' என்று கூறினார்.


ஆனால் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ரூபியோ, 'உக்ரைன் அதிபர் கட்டாயம் மன்னிப்பு கேட்க வேண்டும்' என்று கூறினார்.





ஆஸ்திரேலியா பிரதமர் ஆண்டனி அல்பேனிஸ் கூறுகையில்,' நாங்கள் உக்ரைனுக்கு ஆதரவாக இருக்கிறோம். எத்தனை காலம் ஆனாலும் பரவாயில்லை. அந்த நாட்டுக்கு உதவி செய்வதில் ஆஸ்திரேலியாவின் நலன் இருப்பதாகவே கருதுகிறோம்' என்று கூறினார்.


பேச்சுவார்த்தையில் தொடக்கம் முதலே உக்ரைன் அதிபரிடம் சிடுசிடுவென பேசிய அதிபர் டிரம்ப், நீங்கள் ரஷ்யாவுடன் சமாதானமாக போக வேண்டும், இல்லையெனில் நாங்கள் விலகிக் கொள்கிறோம் என்று கூறினார்.

வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் கரோலின் லிவிட் செய்தியாளர்களிடம் கூறுகையில், 'உக்ரைன் நாட்டுக்கான போர் செலவுகளை தொடர்ந்து செய்வதால், அமெரிக்க மக்கள் சலிப்பு அடைந்துள்ளனர். இந்த போரின் தற்போதைய நடைமுறை நிலவரங்களை ஏற்க உக்ரைன் அதிபர் மறுக்கிறார்.



ஆண்டு கணக்கில் போர் நடக்கிறது. அவரது நாட்டு மக்கள் தொடர்ந்து உயிரிழக்கின்றனர். போருக்கு செலவழிக்கும் அமெரிக்க மக்களோ சலிப்பு அடைந்து விட்டனர். போர் நிலவரம் அவருக்கு சாதகமாக இல்லை.



முந்தைய அமெரிக்க அரசை காட்டிலும், இப்போதைய அமெரிக்க அரசுக்கு வேறு முன்னுரிமைகள் உள்ளன. அதிபர் டிரம்ப் போரை முடிவுக்கு கொண்டு வரவே விரும்புகிறார்.
இவ்வாறு செய்தி தொடர்பாளர் கரோலின் தெரிவித்தார்.

Advertisement