அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி அரசு கல்லுாரி மாணவிகள் உள்ளிருப்பு போராட்டம்

கிள்ளை ; தரமான உணவு மற்றும் அடிப்படை வசதிகள் செய்துத்தரக்கோரி நேற்று சிதம்பரம் அரசு கலைக் கல்லுாரி பிற்படுத்தப்பட்டோர் நல விடுதி மாணவிகள் காலை உணவு சாப்பிடாமல், கல்லுாரிக்கு செல்லாமல் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டதால், திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

சிதம்பரம் அடுத்த சி.முட்லுாரில் அரசு கலைக் கல்லுாரி உள்ளது. கல்லுாரிக்கு பக்கத்திலேயே பிற்படுத்தப்பட்டோர் நல விடுதி உள்ளது. இங்கு, 103 மாணவிகள் தங்கி படித்து வருகின்றனர். விடுதியில் தரமான உணவு, மதில் சுவர்,இரவு நேர காவலாளி, துப்பரவு பணியாளர், போதுமான சமையலர், சுகாதாரமான, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்துத்தரக்கோரி நேற்று 103 மாணவிகளில், 48 மாணவிகள் மட்டும் காலை உணவு சாப்பிடாமலும், கல்லுாரிக்கு செல்லாமல் வகுப்புகளை புறக்கணிப்பு செய்துவிட்டு விடுதி முன்பு காலை 9:30 மணி முதல் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

தகவலறிந்த, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை துணை கலெக்டர் சங்கர், கல்லுாரி முதல்வர் அர்ச்சுனன் (பொறுப்பு) மற்றும் துறைத்தலைவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுப்பட்ட மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மாணவிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றித்தருவதாக உறுதியளித்தால் காலை 11;30 மணிக்கு பேராட்டத்தை கைவிட்டு கல்லுாரிக்கு சென்றனர்.

கல்லுாரி விடுதி முன்பு மாணவிகள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுப்பட்ட சம்பவம் கல்லுாரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement