கர்நாடகா தயாரிப்புகளில் கன்னட மொழி கட்டாயம்; மாநில அரசு கண்டிப்பான உத்தரவு

பெங்களூரு: கர்நாடகாவில் அரசு மற்றும் தனியாரால் தயாரிக்கப்படும் பொருட்களில் கன்னட மொழிகளில் பெயர்கள் இடம்பெற்றிருப்பது அவசியம் என்று அம்மாநில அரசு கண்டிப்பான உத்தரவை பிறப்பித்துள்ளது.


கர்நாடகாவில் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. இந்த நிலையில், அரசு தரப்பில் ஒரு சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், கர்நாடகாவில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களால் தயாரிக்கப்படும் பொருட்களில் மற்ற மொழிகளுடன் சேர்த்து கன்னட மொழியும் இடம்பெற்றிருக்க வேண்டும், என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, தயாரிப்புகளில் இடம்பெற்றிருக்கும் பெயர் மற்றும் வழிமுறைகளை கன்னட மொழிகளில் அச்சிடப்பட்டிருக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


நிலத்தின் கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் மதிப்புகளை மொழி பிரதிபலிப்பதாக குறிப்பிட்டுள்ள அரசு, ஒரு மொழி செழிக்க வேண்டுமென்றால், உற்பத்தி, சந்தைப்படுத்தல் மற்றும் வணிக நடவடிக்கைகள் உள்ளூர் மொழியில் இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.


கன்னட மொழியின் வளர்ச்சி மற்றும் கன்னடர்களுக்கு அனைத்து துறைகளிலும் வேலை வாய்ப்பு வழங்கும் விதமாக, கன்னட மொழி மேம்பாட்டுச் சட்டத்தை கடந்த 2022ம் ஆண்டு கர்நாடகா அரசு அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

Advertisement