சிவகங்கை பஸ் ஸ்டாண்ட் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்: வியாபாரிகள் தர்ணா 

சிவகங்கை : சிவகங்கை பஸ் ஸ்டாண்ட் முன் கடை வைத்து வியாபாரம் செய்த ஆக்கிரமிப்புகளை நகராட்சியினர் அகற்றியபோது, வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சிவகங்கை பஸ் ஸ்டாண்ட் முன் மட்டுமின்றி அரண்மனைவாசல் முதல் தொண்டி ரோடு வரை தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்ல முடியாத வகையில் வியாபாரிகள் தள்ளுவண்டி,பிளாஸ்டிக் பெட்டிகளை அடுக்கி அதன்மேல் பொருட்களை வைத்து ஆக்கிரமித்து வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த வாரம் பஸ் ஸ்டாண்டில் நடந்த குழந்தை தொழிலாளர் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு வந்த கலெக்டர் ஆஷா அஜித், பஸ் ஸ்டாண்ட் வளாகத்திற்கு முன் ரோட்டை ஆக்கிரமித்து வைத்துள்ள அனைத்து பெட்டிகள், தரைக்கடைகளை அகற்ற நகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

ஆக்கிரமிப்பு அகற்றம் துவக்கம்



நேற்று காலை நகராட்சி கமிஷனர் கிருஷ்ணராம், வருவாய் ஆய்வாளர் அழகர்சாமி ஆகியோர் தலைமையில் டி.எஸ்.பி.,அமலஅட்வின், எஸ்.ஐ., சஜீவ் உட்பட போலீஸ் பாதுகாப்புடன் பஸ் ஸ்டாண்ட் முன் தரையில் பெட்டிகளை வைத்து வியாபாரம் செய்த வியாபாரிகளின் கடைகளை அப்புறப்படுத்தினர். அப்போது அங்கிருந்த வியாபாரிகள் தரை வாடகை கொடுத்து தான் கடை நடத்துகிறோம். எங்களை அகற்ற சொல்லக்கூடாது.

மீறி எடுத்தால் தீக்குளிப்போம் எனக்கூறிரோட்டில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் அப்புறப்படுத்தி பெட்டிகளை அகற்றினர். அதே நேரம் அரண்மனை வாசல் முதல் தொண்டி ரோடு வரை ரோட்டின் இருபுறமும் இரும்பு பெட்டிகள், தள்ளுவண்டிகள் வைத்து ஆக்கிரமித்துள்ள கடைகளையும் அகற்ற வேண்டும் என நகராட்சி அதிகாரிகளிடம் வியாபாரிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். நகராட்சி பஸ் ஸ்டாண்ட் வணிக வளாகம் முன் தரையில் இருந்த கடைகளை மட்டும் அகற்றிவிட்டு சென்றனர்.

அகற்றுவதில் பாரபட்சமில்லை



நகராட்சி கமிஷனர் கிருஷ்ணாராம் கூறியதாவது: பஸ் ஸ்டாண்டிற்கு முன் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படும் வகையில் அமைத்திருந்த கடைகள் அகற்றப்பட்டன. அடுத்தகட்டமாக பஸ் ஸ்டாண்ட் முன் அமைத்துள்ள இரும்பு பெட்டி அகற்றப்படும். இதில், எந்தவித பாரபட்ச மும் காட்டமுடியாது, என்றார்.

Advertisement