ஆதம்பாக்கத்தில் வீடு புகுந்து திருடிய 3 வாலிபர்கள் கைது

ஆதம்பாக்கம், ஆதம்பாக்கம், அம்பேத்கர் நகர் 3வது பிரதான சாலையைச் சேர்ந்தவர் கண்ணன், 27. இவர், வீட்டின் ஒரு பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். மஹா சிவராத்திரி அன்று, குடும்பத்துடன் கோவிலுக்கு சென்று வீடு திரும்பினார்.

அப்போது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. அதன் வழியாக உள்ளே புகுந்த திருடர்கள், தங்க நகை, வெள்ளி பொருட்கள், பணம், மொபைல் போன் ஆகியவற்றை திருடி சென்றனர்.

புகாரின்படி, ஆதம்பாக்கம் போலீசார் வழக்கு பதிந்து, கண்காணிப்பு கேமரா காட்சிகள் வாயிலாக விசாரணை நடத்தினர்.

இதில், திருட்டில் ஈடுபட்டது வேளச்சேரி, பவானி நகரைச் சேர்ந்த ஸ்ரீகாந்த், 19, ஆதம்பாக்கம், சாஸ்திரி நகரைச் சேர்ந்த கிட்டு, 19, அம்பேத்கர் நகரை சேர்ந்த வசந்த், 24, என்பது தெரிந்தது.

தலைமறைவாக இருந்த, பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய மூவரையும் பிடித்து, 3 கிராம் கம்மல், 20 கிராம் வெள்ளி காப்பு, 2,000 ரூபாய், மொபைல் போன் ஆகியவற்றை மீட்டனர்.

பின், மூவரும் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைத்தனர்.

Advertisement