லாரஸ் விருது வெல்வாரா ரிஷாப்

புதுடில்லி: லாரஸ் விருது பரிந்துரை பட்டியலில் ரிஷாப் பன்ட் இடம் பெற்றுள்ளார்.
லாரஸ் விளையாட்டு அமைப்பு சார்பில் ஒவ்வொரு ஆண்டும் விருது வழங்கப்படுகிறது. இதில் காயம், சோகம், தோல்வியில் இருந்து மீண்டு வந்து சாதிக்கும் வீரருக்கான 'கம்பேக் ஆப் தி இயர்' விருதுக்கு இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷாப் பன்ட் 27, பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2022, டிசம்பர் 30ல் டில்லியில் இருந்து தனது சொந்த ஊருக்கு (ரூர்கீ) காரை ஓட்டிச் சென்ற ரிஷாப், விபத்தில் சிக்கினார். டேராடூனில் நடந்த முதற்கட்ட சிகிச்சைக்குப் பின், மும்பை கொண்டு செல்லப்பட்டார். இங்கு நடந்த ஆப்பரேசனில், வலது முழங்காலில் உள்ள மூன்று தசைநார்களும் மறுசீரமைக்கப்பட்டன.
பின் பெங்களூரு தேசிய கிரிக்கெட் அகாடமியில், தேவையான பயிற்சிகளில் ஈடுபட்டு, காயத்தில் இருந்து மீண்டு வந்தார். விபத்துக்குப் பின் விளையாடிய முதல் டெஸ்டில் சதம் (எதிரணி-வங்கதேசம்) விளாசி, அணியின் வெற்றிக்கு கைகொடுத்தார்.
இதையடுத்து ரிஷாப் பெயர், விருது பரிந்துரை பட்டியலில் இடம் பெற்றுள்ளது. தேர்வு செய்யப்பட்டால், ஏப்ரல் 21ல் மாட்ரிட்டில் (ஸ்பெயின்) நடக்கும் விழாவில் விருது வழங்கப்படும்.

Advertisement