தேசிய ஜனநாயக கூட்டணி ஆதரவுடன் தமிழகத்தில் மீண்டும் ஜெயலலிதா ஆட்சி

1

ஆண்டிபட்டி : தேசிய ஜனநாயக கூட்டணி ஆதரவுடன் தமிழகத்தில் 2026ல் மீண்டும் ஜெயலலிதா ஆட்சி அமையும் என ஆண்டிபட்டி தொகுதி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் அ.ம.மு.க., பொதுச்செயலாளர் தினகரன் பேசினார்.


தினகரன் பேசியதாவது: வரும் தேர்தலில் ஆண்டிபட்டியில் போட்டியிடுவது குறித்து ஆலோசிக்கப்படும். தேசிய ஜனநாயக கூட்டணியில் பல கட்சிகள் வர உள்ளன. ஜெயலலிதாவின் தொண்டர்கள் நம்முடன் உள்ளனர். கொள்ளையடித்தவர்கள் தான் தற்போது அங்குள்ளனர். இரட்டை இலையை வைத்துக் கொண்டு பழனிசாமி மக்களை ஏமாற்றுகிறார். இரட்டை இலைக்காக விழும் ஓட்டுகள், தி.மு.க.வுட்டு எதிரான ஓட்டுகளை தனக்கு சாதகமாக்கி தி.மு.க.,வுக்கு துணை போகிறார்.


ஸ்டாலின் ஆட்சியில் இருக்கும் வரை தன்னை கைது செய்ய மாட்டார்கள் என்று நோக்கத்துடன் பழனிசாமி கட்சி நடத்துகிறார். தாங்கள் கொள்ளையடித்துள்ள மக்கள் வரிப்பணத்தை பாதுகாக்கவும், வழக்குகளில் இருந்து பாதுகாத்துக் கொள்ளவும் அவர்கள் கட்சி நடத்துகின்றனர். லாட்டரி சீட்டில் யோகம் அடித்தது போல் கிடைத்த முதல்வர் பதவியை பழனிசாமி தவறாக பயன்படுத்தினார்.


தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. போதை கலாசாரம் அதிகரித்துள்ளது. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. வரும் சட்டசபை தேர்தலில் விழித்துக் கொள்ளவில்லை என்றால் அ.தி.மு.க.,வுக்கு மூடு விழா நடத்தி விடுவார்கள். நாம் தான் அ.தி.மு.க.,வை மீட்டெடுக்க வேண்டும். துரோகத்தை தவிர வேறு எதுவும் தெரியாத பழனிசாமி துரோகிகள் குறித்த பட்டியலை வெளியிடுவது நகைச்சுவையாக உள்ளது.


ஜெயலலிதாவின் தொண்டர்கள் ஒரே அணியில் இணைந்தால்தான் தி.மு.க.,வை வீழ்த்த முடியும். பதவி வெறி பிடித்தவர்கள் இதனை தடுத்து வருகிறார்கள். உறுதியாக வரும் தேர்தலில் அதனை முறியடித்து விடுவோம். தேசிய ஜனநாயக கூட்டணி ஆதரவுடன் ஜெயலலிதா ஆட்சி தமிழகத்தில் 2026ல் மீண்டும் அமையும் என்றார்.

Advertisement