கிரிஷ் சோடங்கருடன் சிதம்பரம், பீட்டர் சந்திப்பு; கார்த்தி உட்பட 4 எம்.பி.,க்கள் புறக்கணிப்பு

2



தமிழக காங்கிரசில் பூசல் வெடித்துள்ள நிலையில், மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கரை மூத்த தலைவர்கள் சிதம்பரம், பீட்டர் அல்போன்ஸ் சந்தித்து பேசினர். சத்தியமூர்த்தி பவனில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தை, கார்த்தி, மாணிக்கம் தாகூர் உட்பட நான்கு எம்.பி.,க்கள் புறக்கணித்தனர்.


தமிழக காங்கிரஸ் தலைவராக செல்வப்பெருந்தகை பொறுப்பேற்று ஓராண்டு முடிந்த நிலையில், அவருக்கும், மாணிக்கம் தாகூருக்கும் பனிப்போர் நிலவி வருகிறது. மாணிக்கம் தாகூர் ஆதரவு மாவட்டத் தலைவர்கள் சிலர், டில்லி சென்று செல்வப்பெருந்தகைக்கு எதிராக, கிரிஷ் சோடங்கரிடம் புகார் மனு அளித்தனர். அதையடுத்து, சென்னை வந்த கிரிஷ் சோடங்கர், சத்தியமூர்த்தி பவனில் காங்., நிர்வாகிகளை நேற்று முன்தினம் சந்தித்தார். ஆனால், முதல்முறையாக சத்தியமூர்த்தி பவன் வந்துள்ள அவருக்கு பெரிய அளவில் வரவேற்பு அளிக்கவில்லை; அவர் நடத்திய ஆலோசனை கூட்டத்திற்கும் நிறைய பேர் வரவில்லை.

தனித்தனியாக சந்திப்பு



வழக்கமாக, மேலிட பொறுப்பாளர்களை, மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள், எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் சந்தித்து பேசுவர். ஆனால், மாநில, மாவட்ட நிர்வாகிகள் பலர் வரவில்லை. கார்த்தி, மாணிக்கம் தாகூர் உள்ளிட்ட நான்கு எம்.பி.,க்களும் வரவில்லை.


அதேநேரத்தில், கிரிஷ் சோடங்கரை, அரசியல் விவகாரக்குழு உறுப்பினர்கள், 34 பேரில் 30 பேர் தனித்தனியாக சந்தித்து பேசியது, மாணிக்கம் தாகூர் கோஷ்டிக்கு மகிழ்ச்சியை தந்துள்ளது.


இதற்கிடையில், கிரிஷ் சோடங்கரை தனியாக சந்தித்த செல்வப்பெருந்தகை ஆதரவாளர்கள், 'அவர் தலைவராக நியமிக்கப்பட்டு ஓராண்டு மட்டுமே ஆகியுள்ள நிலையில், அவரை சுதந்திரமாக கட்சி பணியாற்ற அனுமதிக்க வேண்டும்' என, வலியுறுத்தி உள்ளனர்.

அதிருப்தி



அழகிரி, திருநாவுக்கரசர் ஆகியோர், கிரிஷ் சோடங்கரை தனியாக சந்தித்து ஒரு மணி நேரம் பேசியதால், அதுவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. சமீபத்தில் டில்லி சென்ற அதிருப்தி கோஷ்டியை சேர்ந்த மாவட்ட தலைவர்களில் சிவ ராஜசேகரன், எம்.எஸ்.திரவியம் மட்டும், கிரிஷ் சோடங்கரை விமான நிலையத்தில் வரவேற்றுள்ளனர். செல்வப்பெருந்தகை மீதான அதிருப்தியில் இருக்கும் மாவட்டத் தலைவர்கள் யாரும், சத்தியமூர்த்தி பவனில் அவரை சந்திக்கவில்லை.


இதற்கிடையில், நுங்கம்பாக்கத்தில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருந்த கிரிஷ் சோடங்கரை, முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம், முன்னாள் எம்.பி., பீட்டர் அல்போன்ஸ் சந்தித்து பேசி உள்ளனர். கிராம நிர்வாக கமிட்டிகள் நியமன பணிகள் குறித்தும், செல்வப்பெருந்தகை தலைமை நீடிக்க வேண்டும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.


இதனால், செல்வப்பெருந்தகை ஆதரவாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்; எதிர்கோஷ்டியினர் அதிருப்தி அடைந்துள்ளனர்.




- நமது நிருபர் -

Advertisement