ராமர் கோவிலை தகர்க்க சதி; ஹரியானாவில் பயங்கரவாதி கைது

புதுடில்லி: நம் நாட்டில் உள்ள முக்கியமான இடங்களில் தாக்குதல் நடத்த பயங்கரவாதி ஒருவர் சதி திட்டம் தீட்டியுள்ளதாகவும், ஹரியானாவில் அவர் பதுங்கி இருப்பதாகவும் குஜராத் பயங்கரவாத தடுப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.


அந்த பயங்கரவாதியின் புகைப்படத்தை ஹரியானா போலீசாருக்கு குஜராத் போலீசார் அனுப்பி வைத்தனர். இந்நிலையில், ஹரியானா போலீசாருடன் இணைந்து, குஜராத் போலீசார், ஹரியானாவின் பரிதாபாத்தில் நேற்று அதிரடிச் சோதனை நடத்தினர்.

அப்போது, உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த அப்துல் ரகுமான், 19, என்ற பயங்கரவாதி சிக்கினார். அவரிடமிருந்து கையெறி குண்டுகள், ஆயுதங்கள் மற்றும் சில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. அந்த குண்டுகளை உடனடியாக போலீசார் செயலிழக்கச் செய்தனர்.



ஆவணங்களை ஆய்வு செய்தபோது, அயோத்தி ராமர் கோவில் உள்ளிட்ட சில முக்கிய இடங்களை குண்டு வைத்து தகர்க்க, அந்த பயங்கரவாதி சதித் திட்டம் தீட்டியிருந்தது தெரியவந்தது.


இதற்கிடையே, அப்துல் ரகுமானின் சொந்த ஊர், உத்தர பிரதேசத்தின் அயோத்தி மாவட்டத்தில் உள்ள இனயாத் நகர் என தெரிந்தது. எனவே, அங்குள்ள போலீசார், அவரது பெற்றோரை போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர்.


அப்போது, டில்லியில் நண்பரை சந்திப்பதாக கூறி, அப்துல் ரகுமான் சென்றதாக தெரிவித்தனர். அயோத்தியில் ரிக் ஷா டிரைவராக அப்துல் ரகுமான் பணியாற்றி வந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

Advertisement