மக்கள் பயன்பாட்டிற்கு வராத நிழற்கூடம்
மக்கள் பயன்பாட்டிற்கு வராத நிழற்கூடம்
பாப்பிரெட்டிப்பட்டி:தர்மபுரி மாவட்டம், கடத்துார் அடுத்த ஒடசல்பட்டி கூட்ரோடு, பல்வேறு கிராமங்களில் மையப் பகுதியாக உள்ளது. இதன் வழியாக அரூர், மொரப்பூர், கம்பைநல்லுார், சிந்தல்பாடி, பாப்பிரெட்டிப்பட்டி, தர்மபுரி ஆகிய பகுதிகளுக்கு தினமும், ஆயிரக்கணக்கான மக்கள் சென்று வருகின்றனர்.
காலை, மாலை வேளைகளில் பல்வேறு கிராமங்களில் இருந்து வரும் பள்ளி, கல்லுாரி செல்லும் மாணவர்கள், அரசு அலுவலர்கள் ஒடசல்பட்டி கூட்ரோட்டில் தான் பஸ் ஏற வேண்டும். அம் மக்கள் வசதிக்காக, தர்மபுரி செல்லும் சாலையில் பாப்பிரெட்டிப்பட்டி எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியில், 16 லட்சம் ரூபாய் மதிப்பில், மின் விளக்கு, 'சிசிடிவி' கேமரா, மின் விசிறி, இருக்கைகள் என, நவீன வசதிகளுடன் நிழற்கூடம் கட்டப்பட்டது.
ஆனால், மக்கள் பயன்பாட்டிற்கு விடவில்லை. மக்கள் மழை, வெயில், பனிக்காலத்தில் சாலையில் நெடுநேரம் நின்று பஸ் ஏறும் நிலை உள்ளது. பள்ளி குழந்தைகள் முதியவர்கள் தினமும் அவதிப்பட்டு வருகின்றனர்.
எனவே, விரைவாக நிழற்கூடத்தை திறந்து, மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர, பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.