காட்டுப்பன்றிகளால் நெற்பயிர்கள் வீண்

உத்திரமேரூர், உத்திரமேரூர் ஒன்றியம், கட்டியாம்பந்தல், தளவாரம்பூண்டி ஆகிய கிராமங்களில் 500-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதிகளில், விவசாயம் பிரதான தொழிலாக இருந்து வருகிறது.
இங்குள்ள விவசாயிகள் 700 ஏக்கர் பரப்பளவில் நெல், வேர்க்கடலை, மிளகாய் ஆகியவற்றை பயிர் செய்து வருகின்றனர். அதில் பெரும்பாலான விவசாயிகள் நவரை பருவ நெல் நடவு செய்துள்ளனர்.
தற்போது, நெற்பயிர் இளம்பயிர் பருவத்தில் நன்கு வளர்ந்து உள்ளது. இந்நிலையில், மருதம், மலையாங்குளம், சாலவாக்கம் ஆகிய பகுதிகளில் உள்ள காடு மற்றும்மலைகளில் இருந்து,காட்டுப்பன்றிகள் தினமும்இரையை தேடி இந்தபகுதிக்கு வருகின்றன.
இரவு நேரங்களில் கூட்டமாக வரும் காட்டுப்பன்றிகள் நெற்பயிரில் விழுந்து புரண்டு பயிர்களை சேதப்படுத்துகின்றன. இதனால், ஏக்கருக்கு 30,000 ரூபாய் செலவு செய்து வளர்ந்துள்ள நெற்பயிர்கள், சேதமடைந்து விவசாயிகள்நட்டத்திற்கு ஆளாகிவருகின்றனர்.
மேலும், நீர்வரத்து கால் வாய்யோர புதர்களை இருப்பிடமாக கொண்டு, காட்டுப்பன்றிகள் இனப்பெருக்கம் செய்து வேளாண் சாகுபடிக்கு பல்வேறு பிரச்னைகளை ஏற்படுத்திவருகிறது.
காட்டுப்பன்றிகள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த அரசுக்கு விவசாயிகள் பலமுறை கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று விவசாயிகள் தரப்பில் கூறப்படுகிறது.
அதேபோல, பெருநகர், மானாம்பதி, திருப்புலிவனம் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில் பன்றிகளால் வேளாண் சாகுபடி தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருவதுகுறிப்பிடத்தக்கது.
எனவே, நெற்பயிர்களைசேதப்படுத்தி வரும் காட்டுப்பன்றிகள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.