அனைத்து கட்சி கூட்டத்திற்கு தடை கோரிய வழக்கில் அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: 'நாளை நடக்கவுள்ள அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்க, பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சி என்பதற்கான ஆதாரத்துடன் விண்ணப்பித்தால் பரிசீலிக்க வேண்டும்' என, தமிழக அரசுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


லோக்சபா தொகுதிகள் மறுசீரமைப்பு தொடர்பாக, தமிழக அரசு சார்பில், நாளை அனைத்து கட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.


இதில் பங்கேற்க, 40க்கும் மேற்பட்ட கட்சிகள் அழைக்கப்பட்டுள்ளன.


இந்நிலையில், பதிவு செய்யப்பட்ட தங்கள் கட்சிக்கு அழைப்பு விடுக்காததால், நாளை நடக்கவுள்ள அனைத்து கட்சி கூட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என, தேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் வழக்கறிஞர் எம்.எல்.ரவி வழக்கு தாக்கல் செய்தார்.

இந்த மனு, நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி முன், நேற்று விசாரணைக்கு வந்தது.

மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் கே.சக்திவேல் ஆஜராகி, ''அனைத்து தேர்தல்களிலும் போட்டியிட்டு உள்ளோம். இருப்பினும், கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்படவில்லை,'' என்றார்.


அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன் ஆஜராகி, ''மனுதாரர் கட்சி சார்பில், பொதுத்துறை செயலருக்கு விண்ணப்பித்தால் பரிசீலிக்கப்படும்,'' என்றார்.



இந்த வாதத்தை பதிவு செய்த நீதிபதி, கட்சியின் பதிவு தொடர்பான ஆதாரத்துடன், மனுதாரர் விண்ணப்பிக்க வேண்டும் என்றும், அந்த விண்ணப்பத்தை அரசு பரிசீலிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்ட நீதிபதி, மனுவை முடித்து வைத்தார்.

Advertisement