வீடூர் அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு

விக்கிரவாண்டி: வீடூர் அணையிலிருந்து பாசனத்திற்காக நேற்று தண்ணீர் திறந்து விடப்பட்டது.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் தாலுகா, வீடூர் அணை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், முழு கொள்ளளவான 32 அடியில் (605 மில்லியன் கன அடி), 31.600 அடி (573.690 மில்லியன் கன அடி) நீர் நிரம்பியது.

இந்நிலையில், வீடூர் அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார். அதன்படி, நேற்று மாலை தண்ணீர் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமை தாங்கினார்.

அமைச்சர் பொன்முடி அணையில் இருந்து தண்ணீரை திறந்து வைத்தார். அப்போது அவர் கூறுகையில், 'விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, வீடூர் அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிட முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து அணையிலிருந்து இன்று முதல் வரும் ஜூலை 15ம் தேதி வரை (135 நாட்களுக்கு) 382 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

அணையின் மூலம் வீடூர், சிறுவை, பொம்பூர், பொன்னம்பூண்டி, கோரைக்கேணி, ஐவேலி நெமிலி, எறையூர், தொள்ளாமூர், கடகம்பட்டு, கொண்டலாம்குப்பம் என தமிழகத்தில் 2,200 ஏக்கர் மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் 1000 ஏக்கர் என மொத்தம் 3,200 ஏக்கர் பாசன வசதி பெறும்.

விழுப்புரம் மாவட்டத்தில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரண உதவியை ஆன் லைன் மூலமாக அனுப்பி வைக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்' என்றார்.

நிகழ்ச்சியில், சப் கலெக்டர் திவ்யான்சு நிகாம், எம்.எல்.ஏ.,க்கள் மஸ்தான், சிவகுமார், மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ., மாசிலாமணி, திண்டிவனம் தாசில்தார் சிவா, செயற்பொறியாளர் செந்தில்குமார், உதவி செயற்பொறியாளர் ரமேஷ், உதவி பொறியாளர் பாபு, ஒன்றிய சேர்மன் யோகேஸ்வரி, பி.டி.ஓ.,க்கள் சிவக்குமார், நடராஜன், ஊராட்சி தலைவர் ஜெகதீஸ்வரி பிரகாஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement