'கேன்ஸ் ஓபன்' சர்வதேச செஸ் போட்டி; கிராண்ட் மாஸ்டர் இனியன் சாம்பியன்

கோவை; பிரான்ஸ் நாட்டில் நடந்த சர்வதேச செஸ் போட்டியில், கிராண்ட் மாஸ்டர் இனியன் சாம்பியன் பட்டம் வென்றார்.

பிரான்ஸ் நாட்டில் உள்ள கேன்ஸ் நகரில் பிப்., 24 முதல் நேற்று முன்தினம் வரை, 38வது கேன்ஸ் ஓபன் சர்வதேச செஸ் போட்டி நடந்தது. இதில், ஆறு கிராண்ட் மாஸ்டர்கள், 24 இன்டர்நேஷனல் மாஸ்டர்கள் என, 25 நாடுகளை சேர்ந்த, 147 போட்டியாளர்கள் பங்கேற்றனர்.

ஒன்பது சுற்றுக்களாக நடைபெற்ற இப்போட்டியில், முதல் ஆறு சுற்றுகளில் மூன்று வெற்றி, மூன்று டிரா என, 4.5 புள்ளிகளுடன் பின்தங்கியிருந்த, இந்திய வீரர் இனியன் ஏழு மற்றும் எட்டாவது சுற்றில் தொடர்ச்சியாக வெற்றி பெற்று, முதல் இடத்தை சமன் செய்தார்.

தொடர்ந்து நடந்த இறுதிச்சுற்றில், சக நாட்டு வீரர் கிராண்ட் மாஸ்டர் பிரனேஷை வீழ்த்தி, கோவையை சேர்ந்த இனியன் முதல் இடம் பிடித்தார்.

இந்தியாவின் இன்டர்நேஷனல் மாஸ்டர் ஆராத்யா கார்க் இரண்டாவது இடமும், தற்போதைய உலக ஜூனியர் சாம்பியன் கஜகஸ்தான் வீரர் கஸ்ய்பேக்நோன்ஜ்ர்பேக் மூன்றாம் இடமும் பிடித்தனர்.

Advertisement