போதை ஊசி விற்பனை விருத்தாசலத்தில் பரபரப்பு

விருத்தாசலம் : விருத்தாசலத்தில் போதை ஊசி மருந்து விற்பனை தொடர்பாக 5 பேரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

விருத்தாசலம் நகர, ஊரக பகுதிகளில் கஞ்சா விற்பனையை கட்டுப்படுத்தும் வகையில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், ஒவ்வாமைக்கு பயன்படுத்தும் ஒருவித ஊசிமருந்தை, மருத்துவர் பரிந்துரையின்றி கூடுதல் விலைக்கு தனியார் மருந்தகங்களில் சிலர் விற்பனை செய்வதும்; அதனை இளைஞர்கள் போதைக்கு பயன்படுத்தி வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அதன்படி, ஜங்ஷன் சாலையில் சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த நான்கு இளைஞர்களை பிடித்து விசாரித்ததில், அவர்கள் கஞ்சா பயன்படுத்தியிருப்பது தெரிய வந்தது. மேலும், தனியார் மருந்தகத்தில் இருந்து போதை ஊசிமருந்து பெற்று அவ்வப்போது பயன்படுத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக தனியார் மருந்தக உரிமையாளர், அங்கு பணிபுரியும் ஊழியர்களை அழைத்து வந்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இந்த சம்பவம், விருத்தாசலத்தில் திடீர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement