அமித் ஷாவுடன் சந்திப்பு; கட்சியினருக்கு அதிர்ச்சி கொடுத்த 'கோவை மாஜி'

நகர்வலம் செல்ல புறப்பட்டு தயாராக இருந்த சித்ரா, வீட்டு திண்ணையில் அமர்ந்து நாளிதழ்களை புரட்டிக் கொண்டிருந்தாள்.
காபி கோப்பையை நீட்டிய மித்ரா, ''என்னக்கா, ஈஷாவுல நடந்த மகா சிவாரத்திரி விழாவுல, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்துக்கிட்டாரே... விசேஷமான இன்பர்மேஷன் இருக்குதா...'' என, நோண்டினாள்.
''ஈஷாவுல ஒவ்வொரு இடமா சுத்திப் பார்த்ததிலும், ஒரே இடத்துல லட்சக்கணக்கான ஜனங்களை பார்த்ததிலும் அமித் ஷாவுக்கு ஏகப்பட்ட சந்தோஷம்; மனசெல்லாம் பூரிப்பு. அவர் ஓய்வெடுக்கிறதுக்கு தனியறை ஒதுக்கியிருந்தாங்க; வி.ஐ.பி.,கள் பலரும் சந்திச்சு பேசியிருக்காங்க. முன்னாள் அமைச்சர் வேலுமணியும் 'மீட்' பண்ணுனாரு; சந்திப்பு எட்டு நிமிஷம் நடந்ததா உளவுத்துறைக்காரங்க சொன்னாங்க...''
''தன்னுடைய மகன் திருமண நிகழ்ச்சி 'இன்விடேஷன்' கொடுத்ததா சொன்னாங்களே...''
''மித்து... அதெல்லாம் சும்மா... வெளியே சொல்ற காரணமாம். ஏற்கனவே டில்லிக்கு போயி, முக்கியஸ்தர்கள் பலரையும் நேர்ல சந்திச்சு, 'இன்விடேசன்' கொடுத்துட்டாராம்; 10ம் தேதி நடக்கற வரவேற்பு நிகழ்ச்சிக்கு வர்றதா சொல்லியிருக்காராம்; ரஜினியும் நேர்ல வர்றதா சொல்லியிருக்காராம். அந்நிகழ்ச்சி முடிஞ்சதுக்கப்புறம் அ.தி.மு.க., உட்கட்சி விவகாரம் சூடுபிடிக்கும்னு சொல்றாங்க...''
செங்கோட்டையன் சந்திப்பு
''வேலுமணியும், செங்கோட்டையனும் சந்திச்சுக்கிட்டாங்களாமே...''
''அவிநாசி - அத்திக்கடவு திட்ட பாராட்டு விழா பஞ்சாயத்துக்கு அப்புறம் செங்கோட்டையன் 'மூவ்' வேறு விதமா இருக்கு. அவரை, இ.பி.எஸ்., கண்டுக்கவே இல்லை. செங்கோட்டையனை சமாதானம் செய்றதுக்கு வேலுமணி அழைப்பு விட்டாராம்...''
''எம்.எல்.ஏ., அம்மன் அர்ஜூனன் வீட்டுல 'ரெய்டு' நடந்தப்போ செங்கோட்டையன் வந்தாரு. அதுவரையும் வேலுமணியும், முன்னாள் அமைச்சர் தாமோதரனும் அருகருகே உட்கார்ந்திருந்தனர். செங்கோட்டையனை பார்த்ததும், தன்னுடைய இருக்கையை விட்டுக் கொடுத்து தாமோதரன் எழுந்தாரு.
செங்கோட்டையனும், வேலுமணியும் அருகருகே ஒக்கார்ந்து பேசிட்டு இருந்தாங்க. எம்.ஜி. ஆர்., - ஜெ., காலத்துல நடந்த பழைய கால நினைவுகளை பகிர்ந்து, சிரிச்சு பேசிட்டு இருந்தாங்க...'' என்ற சித்ரா, காபியை குடித்து விட்டு, ஹெல்மெட் அணிந்து கொண்டு, நகர்வலத்துக்கு புறப்பட்டாள்.
வரவேற்பு சர்ச்சை
''அதிருக்கட்டும்... மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கார்ப்பரேஷன் மூன்றெழுத்து ஆபீசர் பார்த்தது சர்ச்சையாச்சாமே...''
''மித்து, ஏர்போர்ட்டுல கலெக்டர், போலீஸ் கமிஷனர், கார்ப்பரேஷன் கமிஷனருன்னு ஆபீசர்ஸ் பலரும் சந்திச்சு, வரவேற்பு கொடுத்தாங்க. அப்போ, தாமரைக்கட்சிக்காரங்களும் இருந்தாங்க. கார்ப்பரேஷன் மூன்றெழுத்து ஆபீசரும் பார்த்து, கலாம் பற்றிய புத்தகம் கொடுத்து, போட்டோ எடுத்துக் கிட்டாரு,''
''ஆளுங்கட்சி கோபத்துக்கு ஆளாகிடக் கூடாதுன்னு பயந்து, கலெக்டர், கமிஷனர்கள் வரவேற்ற போட்டோக்களை மாவட்ட நிர்வாகம் வெளியிடலை; கார்ப்பரேஷன் ஆபீசர் சந்திச்சதை மட்டும் சமூக வலைதளத்துல 'யாரோ' பரப்பி விட்டுட்டாங்க. ஆபீசரின் போஸ்ட்டிங்கிற்கு வேட்டு வைக்கிறதுக்கு சிலர் மறைமுகமா காய் நகர்த்தி, அழுத்தம் கொடுத்திருக்காங்க. இருந்தாலும், இந்நாள் அமைச்சரிடம் முன்னாள் அமைச்சர் பேசி, சரிக்கட்டிட்டாராம். அதனால, கண்டத்துல இருந்த மூன்றெழுத்து ஆபீசர் தப்பிச்சிட்டாருன்னு சொல்றாங்க...''
உளவுத்துறைக்கும் சிக்கல்
''ஆனா, நம்மூரு உளவுத்துறை போலீஸ்காரங்களையும் வெவ்வேறு ஊர்களுக்கு துாக்கியடிச்சிட்டாங்களாமே...''
''ஆமாப்பா... நானும் கேள்விப்பட்டேன். 15க்கும் மேற்பட்ட எஸ்.எஸ்.ஐ., - ஏட்டு, போலீஸ்காரங்களை வெவ்வேறு இடத்துக்கு மாத்தியிருக்காங்க. நுண்ணறிவு பிரிவினரை சிட்டிக்குள்ளேயே வெவ்வேறு ஸ்டேஷனுக்கு மாத்தியிருக்காங்க. சில பேரை, வட மாவட்டங்களுக்கும், தென் மாவட்டங்களுக்கும் துாக்கியடிச்சிருக்காங்க. பீளமேடு ஸ்டேஷன்ல இருந்து நாலு பேரை தென்மாவட்டங்களுக்கு மாத்தியிருக்காங்க; நிர்வாக காரணம்னு சொன்னாலும், ஏதாச்சும் வில்லங்கம் நடந்திருக்குமோன்னு போலீஸ்காரங்க பேசிக்கிறாங்க,''
''இன்ஸ்.,கள் பலரும் குஷியில இருக்கறதா கேள்விப்பட்டேனே...''
''அதுவா... சிட்டி லிமிட்டுல டூட்டி பார்க்குற, 18 இன்ஸ்.,களை வெவ்வேறு ஸ்டேஷன்களுக்கு மாத்தியிருக்காங்க. சிலரது மேல ஏகப்பட்ட 'கம்ப்ளைன்ட்' இருந்துச்சு. கட்டப்பஞ்சாயத்து, மாமூல் விவகாரம்னு சிலர் மீதான ரிப்போர்ட், கமிஷனருக்கே நேரடியா போயிருக்கு. ஆனா, 'டிரான்ஸ்பர்' லிஸ்ட்டுல ஏகப்பட்ட குழப்பம் நடந்துருக்கு,''
''பணப்புழக்கம் பெருசா இல்லாத இடத்திலேய நல்லா கல்லா கட்டுன இன்ஸ்.,கள் சில பேருக்கு, ஜாக்பாட் அடிச்ச மாதிரி, வலுவா கரன்சி மழை கொட்டுற இடத்துக்கு 'போஸ்ட்டிங்' போட்டிருக்காங்க; அவுங்க குஷியா இருக்காங்க... உளவுத்துறையை சேர்ந்தவங்க 'அப்செட்டு'ல இருக்காங்க,''
ரைட்டருக்கு கெத்து
''ரைட்டர் ஒருத்தரு இன்ஸ்., மாதிரி கெத்தா சுத்துறாராமே...''
''ஸ்டேஷன் ரைட்டர்கள் எல்லோருமே கெத்துதான். ஸ்டேஷன்ல அவுங்க வச்சதுதான் சட்டம். பல இன்ஸ்.,களுக்கு 'வழி'காட்டுறதே அவுங்கதான்! பஸ் ஸ்டாண்ட் பக்கத்துல இருக்கற ஒரு ஸ்டேஷன்ல நைட் டூட்டி, பைக் ரோந்து, ரோந்து டிரைவர், இன்சார்ஜ் டூட்டி போடுற வேலை ஒதுக்குறது ரைட்டர் பொறுப்பாம். அவரை 'கவனிக்கிற' போலீஸ்காரங்களுக்கு கரன்சி கொட்டுற டூட்டி ஒதுக்குறாராம். அது போதாதுன்னு, வாரக்கலெக்சன், மாதக்கலெக்சன்னு 'டார்கெட்' பிக்ஸ் பண்ணி, கலெக்சன் அள்ளுறாராம். ஸ்டேஷன்ல இருக்கற மத்த போலீஸ்காரங்க புலம்பித் தவிக்கிறாங்க,'' என்ற படி, அவிநாசி ரோட்டில் அண்ணாதுரை சிலை பகுதியில் உள்ள வணிக வளாகத்துக்கு முன் ஸ்கூட்டரை ஓரங்கட்டி நிறுத்தினாள்.
அப்பகுதியில் செயல்படும் கிளப் ஒன்றை பார்த்த மித்ரா, ''மன மகிழ் மன்றம் நடத்துறதுக்கு லைசென்ஸ் கேட்டு, அட்வான்ஸ் கொடுத்தவங்க தவியாய் தவிச்சுட்டு இருக்காங்களாமே...'' என கேட்டாள்.
''அதுவா... அன்னுார் வட்டாரத்துல நாலு இடத்துல மனமகிழ் மன்றங்கள் ஜோரா செயல்படுது; காலையில, 11:00ல இருந்து நைட், 11:00 மணி வரைக்கும் நான்ஸ்டாப்பா சரக்கு சேல்ஸ் பட்டைய கெளப்புது; குடிமகன்கள் கூட்டம் அலைமோதுது. அதைபார்த்து பணம் சம்பாதிக்க ஆசைப்பட்ட மூனு பேரு, கணேசபுரம், மேட்டுப்பாளையம் ரோடு, சிறுமுகை ரோட்டுல மன்றம் துவக்கறதுக்கு விரும்பி, ஆளுங்கட்சியை சேர்ந்த முக்கிய பிரமுகர்களை சந்திச்சிருக்காங்க,''
''லைசென்ஸ் வாங்கிக் கொடுக்கறதுக்கு, 50 'ல'கரம் தேவைப்படும்னு சொல்லியிருக்காங்க. டோக்கன் அட்வான்ஸ் தொகையா, 10 'ல'கரம் கொடுத்திருக்காங்க. இன்னை வரைக்கும் லைசென்ஸ் கிடைக்கலையாம். மனமகிழ் மன்றம் நடத்துறதுக்கு லைசென்ஸ் கொடுக்கறதுக்கு திரைமறைவுல கோடிக்கணக்குல கரன்சி கை மாறுதாம். அதனால, பணத்தை கொடுத்தவங்க அல்லாடிட்டு இருக்காங்க,''
'குடி'மகன்கள் தவிப்பு
''இதுக்கு முன்னாடி... மது பாட்டிலுக்கு பத்து ரூபாய் வாங்கிட்டு இருந்தாங்க... இப்போ... இஷ்டத்துக்கு வாங்குறாங்களாமே...''
''ஆமா, மித்து! நானும் கேள்விப்பட்டேன். பாட்டிலுக்கு பத்து ரூபாய் கூடுதலா கேட்குறதை 'குடி'மகன்கள் பழகிட்டாங்க. எவ்வளவோ போகுது... 10 ரூபாய் தானேன்னு கொடுத்துட்டு போறாங்க. அதுக்கப்புறம்... பாட்டில்ல ஸ்டிக்கர் ஒட்டி, 10 ரூபாய் கூடுதலா கேட்டாங்க. பாட்டிலை திருப்பிக் கொடுத்தா... பணமும் திருப்பித் தருவாங்கன்னு சொன்னதும், 'பார்'ல ஸ்நாக்ஸ் சாப்பிடுறபோது கழிச்சுக்கிறாங்க... இல்லேன்னா... போதையில டிப்ஸ்ஸா வச்சுக்கோன்னு சொல்லிட்டு போயிடுறாங்க...''
''இப்போ... சோமனுார் பக்கத்துல ராமாச்சியம் பாளையத்துல (எண்: 2761) இருக்கற கடையில, அதுக்கும்மேல, 10 ரூபாய் கூடுதலா வாங்குறதுனால... 'குடி'மகன்கள் பொங்கி எழுந்து, சண்டை போடுறாங்க. 20 ரூபாய் யாருக்கு போகுதுன்னு 'டாஸ்மாக்' கடைக்காரங்கள்ட்ட கேள்வி கேட்டு நச்சரிக்கிறாங்க...''
அரசியல் அழுத்தம்
''அதெல்லாம் இருக்கட்டும். மோசடி செஞ்ச பைனான்ஸ் கம்பெனிக்காரங்க சொத்தை ஏலம் விடவிடாம ஆபீசர்களுக்கு ஆளுங்கட்சிக்காரங்க அழுத்தம் கொடுக்குறாங்களாமே...''
''ஆமாப்பா... நம்மூர்ல செயல்பட்டு வந்த நான்கெழுத்து பைனான்ஸ் கம்பெனி மோசடி செஞ்ச வழக்குல, அந்நிறுவனத்தின் சொத்துக்களை விற்பனை செஞ்சு, டெபாசிட்தாரர்களுக்கு தொகையை கொடுக்கச் சொல்லி கோர்ட் உத்தரவு போட்டிருக்கு; ஏழு மாசமாகிடுச்சாம்; இன்னும் ஏலம் விடாமல் இருக்காங்களாம். ஆளுங்கட்சி தரப்புல இருந்து அழுத்தம் கொடுத்து, விற்க விடாமல் தடுத்து வச்சிருக்கிறதா, கலெக்டரிடம் டெபாசிட்தாரர்கள் புகார் செஞ்சிருக்காங்களாம்,''
பதவிக்கு 'வெயிட்டிங்'
அவ்வழியா, ஆளுங்கட்சி கொடி கட்டிய கார் சென்றதை கவனித்த மித்ரா, ''ஆளுங்கட்சியில வார்டு கமிட்டிகளையும், பகுதிக் கழகத்தையும் பிரிக்கப் போறாங்களாமே...'' என கேட்டாள்.
''ஆமா, மித்து! உண்மைதான்! அசெம்ப்ளி எலக்சனுக்கு ரெடியாகறதுக்கு மைக்ரோ லெவல்ல ஆளுங்கட்சியை சீரமைக்கப் போறாங்களாம். 5,000 ஓட்டுல இருந்து, 7,000 ஓட்டு வரைக்கும் ஒரு வார்டு கமிட்டின்னு பிரிச்சிருக்காங்க.
''அதாவது, ஒரு வார்டுல, 20 ஆயிரம் ஓட்டு இருந்துச்சுன்னா... மூனு வார்டு கமிட்டியா பிரிச்சிருக்காங்க. அதே மாதிரி, 30 ஆயிரத்துல இருந்து, 40 ஆயிரம் ஓட்டு வரைக்கும் ஒரு பகுதி கழகம்னு பிரிக்கறதுக்கு முடிவு செஞ்சிருக்காங்க,''
''கார்ப்பரேஷன் லிமிட்டுக்குள்ள ஒவ்வொரு வார்டு கழகத்தையும் பிரிச்சு லிஸ்ட் ரெடி பண்ணி, தலைமைக்கு அனுப்பிட்டாங்களாம். புதுசா உருவாக்குற வார்டு கமிட்டிக்கு செயலாளரா யாரை நியமிக்கலாம்னு ஒவ்வொரு கமிட்டிக்கும் தலா மூனு பேரை, பகுதி கழக நிர்வாகிகள் பரிந்துரை செஞ்சிருக்காங்களாம்.
அதுல இருந்து ஒருத்தரை வார்டு செயலாளரா தலைமை கழகம் அறிவிக்கப் போகுதாம். அதுக்கப்புறம்... பகுதி கழகத்தை பிரிச்சு புதிய பகுதிகள் உருவாக்கி, நிர்வாகிகள் நியமிப்பாங்க.
''அதுக்குப் பிறகே, மாவட்டம் நியமன அறிவிப்பு வரும்னு உடன்பிறப்புகள் சொல்றாங்க...'' என்றபடி, அங்கிருந்த 'ஸ்வீட்ஸ்' ஸ்டாலுக்குள் நுழைந்தாள் சித்ரா.
அவளை பின்தொடர்ந்து சென்றாள் மித்ரா.

மேலும்
-
சி.ஏ., தேர்வு முடிவு வெளியீடு; 23,861 பேர் தேர்ச்சி
-
தரிசன டிக்கெட் இருந்தால் தான் திருப்பதி தேவஸ்தான அறைகளில் தங்க அனுமதி!
-
நெல்லையில் ரூ.2.84 கோடி வேஸ்ட்; ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் அமைத்த சைக்கிள் பாதை மொத்தமும் வீண்!
-
போலி பணி நியமன உத்தரவு வழங்கி மோசடி; ஆசை காட்டி ரூ.13 லட்சம் ஏமாற்றிய இருவர் தேனியில் கைது
-
தங்கம் விலை மீண்டும் உயர்வு; ஒரே நாளில் சவரனுக்கு ரூ.560 அதிகரிப்பு
-
வெளிநாட்டிற்கு வேலை தேடிச் சென்ற நெல்லை வாலிபர்; சடலமாக ஊர் திரும்பிய துயரம்