டெஸ்லா மின்சார கார் தயாரிப்பு ஆலையை துாத்துக்குடி அல்லது ஓசூருக்கு ஈர்க்க முயற்சி

சென்னை: அமெரிக்க முன்னணி தொழில் அதிபரான எலான் மஸ்க்கின், 'டெஸ்லா' நிறுவனத்தின், மின்சார கார் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையை, தமிழகத்துக்கு ஈர்க்கும் முயற்சியில், மாநில அரசு தீவிரம் காட்டி வருகிறது.
பிரதமர் நரேந்திர மோடி, சமீபத்தில் அமெரிக்கா சென்றிருந்தார். அங்கு அவரை எலான் மஸ்க் சந்தித்து பேசினார். இதைத்தொடர்ந்து, அந்நிறுவனம், இந்தியாவில் முதலீடு செய்வதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது.
தமிழக அரசு பேச்சு
அதன்படி, மஹாராஷ்டிர மாநிலம், மும்பையில் டெஸ்லா கார் விற்பனை மற்றும் சேவை மையம் துவங்குவதற்கான அறிவிப்பை அந்நிறுவனம் வெளியிட்டது.
அதைத் தொடர்ந்து, இந்தியாவில் டெஸ்லா மின்சார கார் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை அமைக்கவும் அது முடிவு செய்துள்ளது. அந்நிறுவனத்தின் முதலீட்டை ஈர்க்கும் முயற்சியில் ஆந்திரா, மஹாராஷ்டிர மாநிலங்கள் ஈடுபட்டுள்ளன.
குறிப்பாக, ஆந்திரா அரசு நிலம், மின்சார வரி விலக்கு உள்ளிட்ட சலுகைகளை வழங்கி, டெஸ்லா முதலீட்டை ஈர்க்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு உள்ளது. இருப்பினும், டெஸ்லா இந்தியாவில் எந்த மாநிலத்தில் முதலீடு செய்ய விரும்புகிறது என்பது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடாமல் உள்ளது.
இந்நிலையில் தமிழகத்துக்கு ஈர்க்கும் முயற்சியில் மாநில அரசு ஈடுபட்டுள்ளது. இதற்காக, தொழில் துறையில் தனி குழு அமைக்கப்பட்டு, அக்குழுவினர், டெஸ்லா நிறுவனத்துடன் பேச்சு நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து, தொழில் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: அமெரிக்காவைச் சேர்ந்த போர்டு நிறுவனத்தின் கார் தொழிற்சாலை தமிழகத்தில் உள்ளது. இரு ஆண்டுகளாக முடங்கியுள்ள கார் உற்பத்தியை மீண்டும் துவங்குவதற்கான முயற்சிகளில் அரசு ஈடுபட்டு வருகிறது. இதன் விளைவாக போர்டு, கார் உற்பத்தியை துவங்கப் போவதாக அறிவித்துள்ளது.
40 சதவீதம் மேல்
கடந்த ஆண்டு இறுதியில், தமிழக உயர்மட்டக் குழு, அமெரிக்கா சென்றிருந்த போதும், முதலீட்டை ஈர்ப்பது குறித்து டெஸ்லா நிறுவனத்திடமும் பேசியது. இந்தியாவில் உற்பத்தியாகும் மின்சார கார் மற்றும் இருசக்கர வாகனங்களில், 40 சதவீதம் மேல் தமிழகத்தில் தான் உற்பத்தியாகின்றன.
வியட்நாமின், 'விண்பாஸ்ட்' நிறுவனமும், டாடா மோட்டார்ஸ் நிறுவனமும், தமிழகத்தில் மின்சார கார்கள் தயாரிக்கும் ஆலையை அமைத்து வருகின்றன.
அந்த வரிசையில், டெஸ்லா ஆலையை தமிழகத்தில் ஈர்க்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம். அந்நிறுவனம் துாத்துக்குடி, ஓசூர் பகுதியையும் பரிசீலனையில் வைத்துள்ளது. டெஸ்லா உடன், தமிழக அதிகாரிகள் தொடர்பில் உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.




மேலும்
-
வைகுண்டர் கருத்துகளைப் பின்பற்றி ஏற்றத்தாழ்வற்ற அமைதியான சமுதாயத்தை உருவாக்குவோம்; அண்ணாமலை
-
சி.ஏ., தேர்வு முடிவு வெளியீடு; 23,861 பேர் தேர்ச்சி
-
தரிசன டிக்கெட் இருந்தால் தான் திருப்பதி தேவஸ்தான அறைகளில் தங்க அனுமதி!
-
நெல்லையில் ரூ.2.84 கோடி வேஸ்ட்; ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் அமைத்த சைக்கிள் பாதை மொத்தமும் வீண்!
-
போலி பணி நியமன உத்தரவு வழங்கி மோசடி; ஆசை காட்டி ரூ.13 லட்சம் ஏமாற்றிய இருவர் தேனியில் கைது
-
தங்கம் விலை மீண்டும் உயர்வு; ஒரே நாளில் சவரனுக்கு ரூ.560 அதிகரிப்பு