பள்ளி மாணவர்கள் மொபைல் போன் எடுத்து வருவதை தடை செய்யக் கூடாது: டில்லி ஐகோர்ட்

1


புதுடில்லி: 'பள்ளிகளில் மாணவர்கள், 'மொபைல் போன்' பயன்படுத்த முழுமையான தடை விதிப்பது விரும்பத்தகாத மற்றும் செயல்படுத்த முடியாத அணுகுமுறை' என, டில்லி உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.


டில்லியின், கேந்திரிய வித்யாலயா பள்ளியை சேர்ந்த, 18 வயதுக்கு உட்பட்ட மாணவி, பள்ளியில் மொபைல் போன் பயன்படுத்தியதால் சந்தித்த கடுமையான நடவடிக்கையை எதிர்த்து, டில்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.


அந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, பள்ளிகளில் மாணவர்கள் மொபைல் போன் பயன்படுத்துவது தொடர்பாக, நீதிபதி அனுப் ஜெய்ராம் பம்பானி சில வழிகாட்டுதல்களை வெளியிட்டார். அதன் விபரம்:


* பள்ளிகளுக்கு மாணவர்கள் மொபைல் போன் எடுத்து வருவதை கொள்கை அடிப்படையில் தடை செய்யக்கூடாது. அத்தகைய பயன்பாட்டை ஒழுங்குபடுத்தி கண்காணிக்க வேண்டும்.



* மாணவர்கள் பள்ளிக்குள் நுழையும் போது மொபைல் போன்களை ஒரு இடத்தில் கொடுத்துவிட்டு, வீடு திரும்பும் போது வாங்கிச் செல்ல ஏற்பாடு செய்யப்பட வேண்டும்.


* வகுப்பறையில் பாடம் கற்பிக்கும் சூழலை மொபைல் போன்கள் சீர்குலைக்கக்கூடாது. எனவே, வகுப்பறையில் மொபைல் போன் பயன்படுத்த தடை விதிக்கலாம்.


* பள்ளி வளாகத்துக்கு உள்ளேயும், பள்ளி வாகனங்களிலும், மொபைல் போன்களில் படம் எடுக்க தடை விதிக்க வேண்டும்.


* பொறுப்புள்ள, 'ஆன்லைன்' நடத்தை, 'டிஜிட்டல்' பழக்கவழக்கங்கள், மொபைல் போன்களை ஒழுக்கத்துடன் பயன்படுத்துவது குறித்து, மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டும்.


* நீண்ட நேர ஸ்மார்ட் போன் பயன்பாட்டினால் ஏற்படும் தீமைகளை மாணவர்களுக்கு எடுத்துரைக்க வேண்டும்.


* பாதுகாப்பு மற்றும் தகவல் தொடர்பு பயன்பாட்டுக்காக, பள்ளி களில் மொபைல் போன் பயன்பாட்டை அனுமதிக்கலாம். பொழுதுபோக்கு காரணங்களுக்காக பயன்படுத்தக் கூடாது.


* பெற்றோர், கல்வியாளர்கள் மற்றும் நிபுணர்களை கலந்து ஆலோசித்து, பள்ளிகளில் மொபைல் போன் பயன்பாட்டை ஒழுங்குபடுத்துவது, கண்காணிப்பது தொடர்பான கொள்கையினை வகுக்க வேண்டும்.


* அதைவிடுத்து, பள்ளிகளில் மாணவர்கள், மொபைல் போன் பயன்படுத்த முழுமையான தடை விதிப்பது விரும்பத்தகாத மற்றும் செயல்படுத்த முடியாத அணுகுமுறை. இவ்வாறு நீதிபதி தெரிவித்தார்.

Advertisement