தமிழகத்தை தீண்டத்தகாத மாநிலமாக பார்க்கின்றனர்: மத்திய அரசு மீது ஸ்டாலின் குற்றச்சாட்டு

சென்னை: ''அரசியலாக மட்டுமல்ல, அக்கறையால் கூட தமிழகத்துக்கு எதையும் செய்து விடக்கூடாது என்று நினைக்கிறார்கள். அதற்கு காரணம் தமிழகத்தை அவர்கள் தீண்டத்தகாத மாநிலமாக பார்க்கிறார்கள்,'' என்று மத்திய பா.ஜ., அரசு மீது முதல்வர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
அவரது கடிதம்: தி.மு.க., அரசின் கொள்கைகள் வேறு; பா.ஜ.,வின் அரசியல் கொள்கை முற்றிலும் வேறு. அரசியல் ரீதியான கொள்கைகளில் மட்டும் முரண்பட்டால் பரவாயில்லை. அந்த அரசியல் நோக்கத்தை நாம் புரிந்து கொள்ளலாம். ஆனால் வெள்ள நிவாரண நிதி தருவதில்லை. பள்ளி பிள்ளைகள், ஆசிரியர் நலன்களுக்கான நிதி தருவதில்லை. மெட்ரோ இரண்டாம் கட்ட பணிகளுக்கு நிதி தருவது இல்லை. பத்தாண்டுகளாக எய்ம்ஸ் மருத்துவமனையை கட்டுவதில்லை என்று சொன்னால் என்ன பொருள்?
தமிழகத்துக்கு எதுவும் கிடைத்து விடக்கூடாது எதுவும் தந்துவிடக் கூடாது என்று சதிச் செயலை பா.ஜ., செய்கிறது. அரசியலாக மட்டுமல்ல அக்கறையால் கூட தமிழகத்துக்கு எதையும் செய்து விடக்கூடாது என்று நினைக்கிறார்கள். அதற்குக் காரணம் தமிழகத்தை அவர்கள் தீண்டத்தகாத மாநிலமாக பார்க்கிறார்கள். தமிழகத்துக்கு உதவினால் தமிழகம் வளர்ந்துவிடும் என்பது ஒரு பக்கம், தமிழகத்தை பார்த்து மற்ற மாநிலங்களும் வளர்ந்து விடும் என்று பயப்படுகிறார்கள்.
மொழிச்சிக்கல்
Google Translate, Chat GPT, Artificial Intelligence போன்ற தொழில்நுட்பங்கள் மொழி சிக்கல்களை மனிதர்கள் எளிதாகக் கடப்பதற்கு உதவுகின்றன. அச்சிடப்பட்ட காகிதத்தைப் படம் எடுத்து, அதை இன்றுள்ள தொழில்நுட்பத்தில் எழுத்துருக்களாக மாற்றி, நாம் எளிதில் பயன்படுத்திக் கொள்ள முடியும். ஒரு மொழியில் உள்ள ஒலிப்பதிவை மற்றொரு மொழியில் மாற்றம் செய்து கொள்ளும் வசதிகளும் உருவாகிவிட்டன. ஒவ்வொரு மொழிக்கும் தேவையான தொழில்நுட்பத்தைக் கற்றுக்கொள்வது தான் மாணவர்களின் எதிர்காலத்திற்கு மிகுந்த பயனளிக்கும்.
அதற்குப் பதிலாக, ஒவ்வொரு மொழியையும் மாணவர்களிடம் திணிக்க முயற்சிப்பது அவர்களுக்கு சுமையாகவே அமையும். அறிவியலைப் புறக்கணிக்கும் கட்சியான பா.ஜ.,வும் அதன் நிர்வாகிகளும், மொழித் திணிப்பைக் கட்டாயமாக்குகிறார்கள். ஒருவர் விரும்புகிற எந்த மொழிக்கும் நாங்கள் எதிரிகளல்ல. எந்த மொழியையும் எங்கள் மீது திணிக்காதீர்கள் என்பதைத்தான் அன்று முதல் இன்று வரை தெளிவாகச் சொல்கிறோம்.
பா.ஜ.,வின் நோக்கம்
சிறுபான்மை சமுதாய மக்களுக்கான உருது மொழியும், அண்டை மாநிலங்களில் பேசப்படும் தெலுங்கு, கன்னட மொழிகளும் நம்முடைய கல்விக் கொள்கையின்படி இங்குள்ள சிறுபான்மை மொழிப் பள்ளிகளில் கற்றுத் தரப்படுகின்றன. இந்த மொழிகள் எதுவும் மற்றவர்கள் மீது ஆதிக்கம் செலுத்துக் கூடியதல்ல.
ஆனால், பா.ஜ.,வின் நோக்கமே தமிழகத்தில் ஆதிக்க ஹிந்தியையும் சமஸ்கிருதத்தையும் கட்டாயமாகத் திணிக்க வேண்டும் என்பதுதான். அதனால்தான் ஹிந்தி படிக்க தமிழகத்தில் உள்ள மாணவர்களுக்கு ஏன் வாய்ப்பு ஏற்படுத்தித் தரவில்லை என்று கரிசனம் வழிவதுபோல கேட்கிறார்கள்.
தமிழக அரசின் பாடத்திட்டத்தின் கீழ் செயல்படும் ஆயிரக்கணக்கான தனியார் பள்ளிகள் எதிலும் மும்மொழித் திட்டம் கிடையாது. ஹிந்தி மொழி என்பது கட்டாயமுமில்லை. அந்த மொழியில் தேர்வு நடத்தப்படுவதுமில்லை. இந்தியாவின் தென்மாநிலங்களில் உள்ளவர்கள் ஹிந்தி மொழியைக் கற்பதும், வட மாநிலத்தவர்கள் தென்னிந்திய மொழிகளில் ஒன்றைக் கற்பதும் தேச ஒற்றுமைக்கு வழிவகுக்குமென காந்தியடிகள் நம்பினார்.
கோட்சே வழி
வள்ளுவர் சிலையை கங்கை கரையில் நிறுவுவதாக சொல்லி குப்பை மேட்டில் போட்டவர்களா தமிழ் கற்றுத் தருவதற்கான அமைப்பை நிறுவப் போகிறார்கள்? கோட்சே வழியைப் பின்பற்றும் இயக்கத்தினர் காந்தியின் நோக்கத்தை ஒரு போதும் நிறைவேற்ற மாட்டார்கள். சென்னை மாகாணம் என்ற பெயர் இருந்த காலத்திலேயே 'தமிழ்நாடு காங்கிரஸ்' என்று பெயர் வைக்கச் செய்தவர் காந்தியடிகள்.
தமிழகத்தில் தற்போது ஓடும் ரயில்களுக்கு கூட ஹிந்தி-சமஸ்கிருதப் பெயர்களை வைப்பவர்கள் மத்திய பா.ஜ., ஆட்சியாளர்கள். தமிழையும் பிற மொழிகளையும் அழிப்பதுதான் அவர்களின் ரகசியத் திட்டம். அதை வெளிப்படையாக எதிர்க்கும் வலிமை கொண்டதுதான் தி.மு.க.,. இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.










மேலும்
-
வன விலங்குகளுக்கான 'வன்தாரா'; தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி
-
இதோ... நாங்க ரெடி! அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்கும் த.வெ.க.
-
நிதி நிறுவன உரிமையாளரை மிரட்டி பணம் பறிக்க முயற்சி: போலி நிருபர்கள் 8 பேர் கைது
-
வைகுண்டர் கருத்துகளைப் பின்பற்றி ஏற்றத்தாழ்வற்ற அமைதியான சமுதாயத்தை உருவாக்குவோம்; அண்ணாமலை
-
கனடா, சீனாவில் இருந்து வரும் பொருட்களுக்கு 25 சதவீதம் கூடுதல் வரி: டிரம்ப் அறிவிப்பு அமல்
-
மஹா., அமைச்சர் தனஞ்ஜெய் முண்டே திடீர் ராஜினாமா!