நெல்லையில் ரூ.2.84 கோடி வேஸ்ட்; ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் அமைத்த சைக்கிள் பாதை மொத்தமும் வீண்!

16

திருநெல்வேலி: திருநெல்வேலி என்.ஜி.ஓ. காலனியில் 1.8 கி.மீ., தூரத்துக்கு, சைக்கிள் பாதை ரூ 2.84 கோடி மதிப்பில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் அமைக்கப்பட்டது. தற்போது பராமரிப்பின்றி பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.



திருநெல்வேலி மாநகராட்சிக்கு மத்திய அரசு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.1000 கோடி நிதி வழங்கியது. இந்தத் திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட பல்வேறு கட்டடங்கள் இன்னும் பயன்பாட்டுக்கு வராத நிலையில் உள்ளன. அப்போது உள்ளாட்சி அமைப்புகள் இல்லாததால், அதிகாரிகள் தன்னிச்சையாக தேவையற்ற திட்டங்களில் கோடிக்கணக்கில் அரசு நிதியை வீணடித்தனர்.


அவ்வாறு வீணான ஒரு முக்கியமான திட்டம் என்.ஜி.ஓ காலனி பகுதியில் அமைக்கப்பட்ட சைக்கிள் பாதை. இந்த பகுதியில் ஏற்கனவே தார் சாலை இருந்த நிலையில், அதன் ஓரத்தில் பச்சை நிறத்தில் பெயிண்ட் அடித்து, சில தடுப்பு பிளாஸ்டிக் அமைப்புகள் வைத்தனர்.

மொத்தம் 1.8 கி.மீ. நீளத்திற்கான இந்தச் சைக்கிள் பாதைக்கு ரூ.2.84 கோடி நிதி செலவழிக்கப்பட்டது. ஆனால், திட்டம் செயல்படுத்தப்பட்ட 6 மாதங்களுக்குள் அதில் பயனில்லை என்பது வெளிப்பட்டது. சைக்கிள் பாதையின் ஒவ்வொரு வீட்டு முன்பும் வாகனங்கள் நிறுத்தப்பட்டதால், சைக்கிள்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.


மழை நீர் தேங்கி, சாக்கடை கலக்கும் சூழல் உருவாகி, பாதை பல இடங்களில் முற்றிலும் சேதமடைந்தது. பாதை பராமரிப்பு ஒப்பந்தக்காரர்களின் பொறுப்பாக இருந்தும், அவர்கள் கவனிக்காததால், தற்போது முழுவதுமாக பயன்பாடு இழந்து உள்ளது.


ரூ.2.84 கோடி வீணாகியதற்குப் பதிலாக, இந்த நிதியில் திருநெல்வேலி மாநகராட்சியின் அரசுப் பள்ளிகளுக்கு கூடுதல் வகுப்பறைகள் கட்டியிருக்கலாம். உடைந்த மேற்கூரையுடன் செயல்படும் துவக்கப் பள்ளிகள், அங்கன்வாடி மையங்களுக்காகக் குறைந்தது 10 கட்டடங்கள் அமைக்க முடியும். வெறும் 1.8 கி.மீ. சாலையில் பச்சை பெயிண்ட் அடிக்கவே ரூ.2.84 கோடி செலவழிக்கப்பட்டது திருநெல்வேலி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இந்தத் திட்டத்திற்கு நிதி ஒதுக்கிய நிர்வாகத்திற்கும், செயல்படுத்திய அதிகாரிகளுக்கும் இருக்கும் பொறுப்பின்மையே இந்த நிலைமைக்கு காரணம் என மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.


செய்தி எதிரொலி!



ரூ 2.84 கோடி செலவில் அமைக்கப்பட்ட சைக்கிள் பாதை பயனின்றி இருப்பது குறித்து இன்று தினமலர் இணையதளத்தில் செய்தி வெளியானது. தற்போது மாநகராட்சி கமிஷனர் சுகபுத்ரா உத்தரவின் பேரில் மாநகராட்சி ஊழியர்கள் அதை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Advertisement