கட்சி மாறிய எம்.எல்.ஏ.,க்கள் தகுதி நீக்கம் தாமதம்: சுப்ரீம் கோர்ட் சரமாரி கேள்வி!

7

புதுடில்லி: காங்கிரஸுக்குத் தாவிய பி.ஆர்.எஸ்., கட்சி எம்.எல்.ஏ.,க்கள் 7 பேர் மீதான தகுதி நீக்க மனுக்களில் முடிவெடுப்பதில் ஏற்பட்ட தாமதம் தொடர்பாக தெலுங்கானா அரசு, சபாநாயகர் உள்ளிட்டோருக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

பாரத ராஷ்டிர சமிதி(பி.ஆர்.எஸ்) கட்சியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற ஏழு எம்.எல்.ஏ.,க்கள், ஆளும் காங்கிரசுக்கு தாவினர். அந்த எம்.எல்.ஏ.,க்கள் மீதான தகுதி நீக்க மனுக்கள் மீது தெலுங்கானா சட்டமன்ற சபாநாயகர் முடிவெடுப்பதை தாமதப்படுத்தி வருகிறார்.

இது தொடர்பாக, பி.ஆர்.எஸ்., கட்சி சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. விசாரித்த நீதிபதிகள் தெலுங்கானா அரசுக்கு சுப்ரீம் கோர்ட் இன்று நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.

நீதிபதிகள் பி.ஆர். கவாய் மற்றும் அகஸ்டின் ஜார்ஜ் மாசி ஆகியோர் அடங்கிய பெஞ்ச், மாநில அரசு, சபாநாயகர் அலுவலகம், தெலுங்கானா சட்டமன்றச் செயலாளர், இந்தியத் தேர்தல் ஆணையம் மற்றும் கட்சித் தாவிய எம்எல்ஏக்களிடமிருந்து பதில்களைக் கோரியது.

விசாரணையின் போது, ​​தகுதி நீக்க மனுக்கள் மீது முடிவெடுப்பதில் நீடித்த தாமதத்தை நீதிமன்றம் கேள்வி எழுப்பியது, 'இந்த செயல்முறை பதவிக்காலம் முடியும் வரை தொடருமா? அப்படியானால் ஜனநாயகக் கொள்கைகளுக்கு என்ன நடக்கும், தாமதங்கள் முடிவை அர்த்தமற்றதாக்கும்' என்று நீதிபதிகள் கூறினர்.

விசாரணையை மார்ச் 25ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

Advertisement