மாநில அரசுகள் தோல்வி: சுப்ரீம் கோர்ட்

புதுடில்லி: மக்களுக்கு உரிய விலையில் மருந்துகள் மற்றும் மருத்துவ உள்கட்டமைப்புகளை ஏற்படுத்துவதில் மாநில அரசுகள் தோல்வி அடைந்து விட்டன என சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது.

தனியார் மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகள், தங்கள் மருத்துவமனையில் உளள மருந்தகங்களில் மருந்துள், மருத்துவ சாதனங்களை வாங்க வேண்டும் என கட்டாயப்படுத்துவதாக சுப்ரீம் கோர்ட்டில் பொது நல வழக்கு தொடரப்பட்டது. இதனை நீதிபதிகள் சூரிய காந்த் மற்றும் என் கே சிங் அமர்வு விசாரித்து வருகிறது. முன்பு நடந்த விசாரணையின்போது, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டு இருந்தது. இதன்படி தமிழகம் , ஒடிசா, அருணாச்சலபிரதேசம்,சத்தீஸ்கர், பீஹார், ஹிமாச்சல் மற்றும் ராஜஸ்தான் மாநில அரசுகள் பதிலளித்து மனு தாக்கல் செய்திருந்தன.

அந்த மனுக்களில், விலைக் கட்டுப்பாடு தொடர்பாக மத்திய அரசு பிறப்பிக்கும் உத்தரவுகளை நம்பி இருப்பதாகவும், அத்தியாவசிய மருந்துகளின் விலைகள் நியாயமான விலையில் கிடைப்பதை உறுதி செய்வதாகவும் தெரிவித்தன.

மத்திய அரசு தாக்கல் செய்த பதில் மனுவில், '' தனியார் மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ அமைப்புகள் பொது மக்களிடம் சுரண்டுவதை தடுக்கும் வகையில் விதிமுறைகளை வகுக்க வேண்டும், '' எனத் தெரிவித்து இருந்தது.

இந்த வழக்கை இன்று மீண்டும் விசாரித்த நீதிபதிகள் கூறியதாவது: மற்ற இடங்களில் குறைவான இடங்களில் கிடைக்கும் மருந்துகள் மற்றும் மருத்துவ சாதனங்களை, தங்களது மருந்தகங்களில் தான் வாங்க வேண்டும் என நோயாளிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரை தனியார் மருத்துவமனைகள் கட்டாயப்படுத்தவில்லை என்பதை மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும்.

மக்களுக்கு உரிய விலையில் மருந்துகள் கிடைப்பதை உறுதி செய்வதிலும், மருத்துவ உள்கட்டமைப்பு கிடைக்கச் செய்வதிலும் மாநில அரசுகள் தோல்வி அடைந்துவிட்டன. ஏழை மக்களுக்கு அத்தியாவசிய மருந்துகள் கூட உரிய விலையில் கிடைக்கவில்லை. மாநில அரசுகளின் இந்தத் தோல்வி தனியார் மருத்துவமனைகளுக்கு ஆதரவு அளிப்பதுடன் அவர்களை ஊக்குவிக்கிறது. மக்களுக்கு உரிய மருத்தவ வசதிகள் கிடைக்கச் செய்வது மாநில அரசுகளின் கடமை. இவ்வாறு நீதிபதிகள் தங்களது உத்தரவில் தெரிவித்து உள்ளனர்.

Advertisement