பள்ளி விழாவில் அரசியல் பேச்சு; அதிர்ந்த ராமநாதபுரம் மாணவர்கள்

ராமநாதபுரம்; ராமநாதபுரத்தில் நடந்த அரசு விழாவில் சிறுபான்மையினர் ஆணைய மாநில ஒருங்கிணைப்பாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் இருமொழி கல்விக்கொள்கையை ஆதரிக்க வலியுறுத்தி கையை உயர்த்தக் கோரியும், ஒருவர் வாங்க மட்டும் செய்வார், திரும்ப தரமாட்டார் அவர் யார் என பிரதமர் மோடி குறித்தும் கேள்வி கேட்டு அரசியல் பேசியதால் கல்லுாரி மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
ராமநாதபுரம் ஓட்டல் வைசிராயில் தமிழக அரசு சிறுபான்மையினர் ஆணையம் சார்பில் கல்லுாரி மாணவர்களுக்கு மாவட்ட அளவிலான பேச்சுப்போட்டி துவக்க விழா நடந்தது. இதில் பங்கேற்ற மாநில சிறுபான்மையினர் ஆணைய ஒருங்கிணைப்பாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் பேசியதாவது: தாய்மொழி தமிழ் தலைமுறை மொழி. ஆங்கிலம் எங்கள் தகவல் மொழி என இருமொழிக் கொள்கையை முன்னாள் முதல்வர் அண்ணாதுரை காலம் தொட்டு கடைப்பிடிக்கிறோம். எங்கிருந்து வந்தது மூன்றாவதாக ஹிந்தி.
இருமொழி போதும் என ஆதரிக்கும் மாணவர்கள் கையை உயர்த்துங்கள் எனக்கூறியதால் வேறு வழியின்றி மாணவர்களும் கையை உயர்த்தினர்.
அவர் ஆங்கிலத்தில் பேசும் போது, ''ஒருவர் வாங்க மட்டும் செய்வார். திரும்ப தரவே மாட்டார், அவர் யார்,'' என மாணவர்களை பார்த்து கேள்வி எழுப்பினார். அதற்கு பேராசிரியர்கள், மாணவர்கள் தரப்பில் பதில் வரவில்லை. ஆனால் வந்திருந்த தி.மு.க.,வினர் பிரதமர் மோடி எனக்கூறினர். 'சரியாக சொன்னீர்கள்,' எனக்கூறிவிட்டு ஒருங்கிணைப்பாளர் தொடர்ந்து மாணவர் பேச்சாற்றல் வளர்ப்பு குறித்து பேசினார்.
கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன், எம்.எல்.ஏ.,க்கள், பேராசிரியர்கள், அதிகாரிகள் பங்கேற்ற விழாவில் ஆணைய ஒருங்கிணைப்பாளரே அரசியல் பேசியதால் மாணவர்கள் அதிர்ச்சிக்குள்ளாயினர்.